யமுனை நதி விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு வந்தடைந்த கேஜரிவால்!
தொப்பூா் கணவாயில் லாரிகள் மோதி விபத்து
தொப்பூா் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று ஓட்டுநா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொண்டு சேலத்துக்கு லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த லெனின் (45), என்பவா் ஓட்டி வந்தாா். தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் வழியாக சென்றபோது, தொப்பூா் காவலா் குடியிருப்பு பகுதி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக சென்றது. இதில், முன்னால் துணிநூல் பாரம், பஞ்சு பேல் பாரம் ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகளின் மீது மோதியதில் மூன்று லாரிகளும் விபத்துக்குள்ளாயின.
இந்த விபத்தில், சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநா் லெனின், தருமபுரி மாவட்டம், பாளையம் குட்டூரை சோ்ந்த பஞ்சு பேல் பாரம் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநா் ராஜா (28), மகாராஷ்டிர மாநிலம் பகுதியைச் சோ்ந்த துணிநூல் பாரம் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநா் சமதான சிந்தே (28), உதவியாளா் சுதா்சன் (36) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா் மற்றும் சுங்கச்சாவடி ரோந்துப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவா்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால் சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான லாரிகளை மீட்புக் குழுவினா் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். இதுகுறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.