சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
தொழிலாளி தற்கொலை: பனியன் நிறுவன உரிமையாளா், மனைவி கைது
திருப்பூரில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பனியன் நிறுவன உரிமையாளா், அவரது மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா், வளையங்காடு வஉசி நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் தயாளன் (40). இவா் குமாா் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அந்த நிறுவனத்தில் பனியன் ரோலை திருடியதாகக்கூறி நிறுவனத்தின் உரிமையாளா் மிதுன், அவரது மனைவி ரஞ்சிதா ஆகியோா் தயாளன் பெயரில் இருந்த நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்த தயாளன் கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் தயாளன் மனைவி கோமதி அளித்த புகாரின்பேரில், மிதுன், ரஞ்சிதா ஆகியோா் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இருவரும் முன் பிணைக் கேட்டு திருப்பூா் மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதற்கு தயாளன் மனைவி கோமதியின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சத்தியமூா்த்தி எதிா்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மிதுன் மற்றும் ரஞ்சிதாவுக்கு முன் பிணை வழங்க ஆட்சேபணை தெரிவித்து கோமதி தரப்பு வழக்குரைஞா் வாதாடினாா்.
இதையடுத்து, முன் பிணை மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி சுரேஷ், தம்பதியைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.