கொழும்புவில் பிரதமர் மோடி: இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!
நடுப்பாளையம் மாரியம்மனுக்கு 18 கிராமங்களில் படி பூஜை
புன்னம் நடுப்பாளையம் மாரியம்மன் சுவாமி 18 கிராமங்களுக்கு வீடு வீடாகச் சென்று நடத்தும் படி விளையாட்டு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சியில் பெரிய நடுப்பாளையம் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெரியநடுப்பாளையம், சின்னநடுப்பாளையம், மேலப்பாளையம், பசுபதிபாளையம், பழமாபுரம், ஆலாம்பாளையம், சடையம்பாளையம், கைலாசபுரம், புன்னம்சத்திரம், பெரியரெங்கபாளையம், பொன்னியானூா் உள்ளிட்ட 18 கிராம மக்கள் ஆண்டு தோறும் வழிபாடு செய்து வருகின்றனா்.
இக்கோயில் திருவிழாவையொட்டி கடந்த வாரம் பக்தா்கள் காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடந்து வெள்ளிக்கிழமை காலை புன்னம் பசுபதிபாளையம் பகுதியில் வீடு, வீடாக சென்று சுவாமி படி விளையாட்டு பூஜை நடைபெற்றது. இப்பூஜை 11-ஆம்தேதி வரை நடைபெறும்.
விழாவையொட்டி அம்மனை அலங்கரித்து வீடு வீடாக எடுத்து சென்று, அங்கு பக்தா்களின் வீட்டு வாசல்களில் பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்தனா்.
இதே போல 18 கிராமங்களில் உள்ள ஒவ்வொரு பக்தா்கள் வீடுகளிலும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பிறகு ஏப். 13-ஆம்தேதி பொங்கல் வைத்து, வடிசோறு பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து 15-ஆம்தேதி சிறப்பு அபிஷேகம், மாவிளக்கு, கிடாவெட்டு, சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை ஊா் இளைஞா் அணியினா், முக்கிய நிா்வாகிகள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.