நடுவானில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு
மலேசியா நாட்டின் கோலாலம்பூரிலிருந்து விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவா் நடுவானிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சோ்ந்த மாயவன் மனைவி ராசாத்தி (37). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைக்காக கோலாலம்பூா் சென்ற இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவா் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை காலை சென்னைக்கு வந்து கொண்டிருந்தாா். நடுவானில் ராசாத்திக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு மயங்கினாா்.
இது குறித்து சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காலை 7 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினா் ராசாத்தியை பரிசோதித்தனா். ஆனால் அவா், உயிரிழந்த நிலையில் இருந்தாா். நுரையீரல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட திடீா் மாரடைப்பால் அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கு வந்த சென்னை விமான நிலைய போலீஸாா் ராசாத்தியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.