தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
நமக்குள்ளே... பழையன கழிதல், புதியன புகுதல்... பொங்கல் சொல்லும் எவர்கிரீன் மெசேஜ்!
பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியில் உள்ளன நம் வீடுகள். உறவுகள் கூடல், சிறப்பு உணவுகள், நல் நம்பிக்கைகள் கைகூடச் செய்யப்படும் சடங்குகள் என மனம் தித்திக்கக் கிடக்கிறோம். ஓய்வில்லாமல் ஓடும் தினசரிகளுக்கு எல்லாம் விடுப்பு விட்டுவிட்டு இதுபோன்ற சிறப்பு சந்தோஷ தருணங்களை அள்ளித்தருவதால்தானே பண்டிகைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் மனிதர்கள்?!
சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து ஊர் பேருந்து நிலையங்களிலும் திணறத் திணற பொங்கல் சிறப்புப் பேருந்துகள் கிளம்பிக்கொண்டேயிருந்த காட்சிகளின் காரணம் ஒன்றுதான்... கூடடையும் பறவையின் குதூகலம். வேலை, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக சொந்த ஊர்களில் இருந்து கிளம்பிச் சென்றவர்கள் வேர் தேடி வந்துகொண்டிருந்த சாலைகள் தோறும் முளைத்துக்கொண்டே இருந்தன அவர்களின் பால்ய நினைவுகள்.
பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என... ஊரில் இந்த முகங்களையெல்லாம் பார்த்ததும்தான் எத்தனை மகிழ்ச்சி! காலத்தின் கடமைகளால் பிரிய நேரிட்டவர்களை எல்லாம் மீண்டும் பார்க்கும்போது மனது பின்னோக்கி, பிரிந்தபோதிருந்த அந்த வயதுக்கே சென்றுவிடுவதுதான் எத்தனை ஆச்சர்யம்! பள்ளித் தோழியிடம் பேசுகையில் பள்ளி வயதுக்கே மீண்டும் நான் சென்றுவிடுவதும், பாட்டியைப் பார்க்கும்போது 10, 12 வயதுப் பேத்தியாக நாம் மாறிவிடுவதும் என... காலங்களைத் திருப்பிப்போடும் மாயக் கணக்குகள் இந்தச் சந்திப்புகள்.
இந்தப் பயணங்களில், நம் கடமையாக நாம் ஒன்றைச் செய்யலாம். மகப்பேறு ஆரோக்கியத்தில் இருந்து மாற்றுச் சிந்தனைகள் வரை... நகரத்து வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுத்தவை ஏராளம் இருக்கலாம். அவற்றுக்கான அணுகலுக்கு வாய்ப்பின்றி இருக்கும் நம் ஊர் மக்களுக்கு, அதை கொண்டு சேர்க்கும் கருவியாக நாம் இருக்கலாம்.
20 வயதுகளில் இருக்கும் பெண்களிடம் அரசு வழங்கும் தொழில் கடன்கள் பற்றி திசைகாட்டி விட்டு வரலாம். 30 வயதுகளில் இருக்கும் பெண்களிடம் கருத்தடை பற்றி நாம் அறிந்தவற்றை விழிப்பு உணர்வு ஏற்படுத்தலாம். 50 வயதிலிருக்கும் சித்தப்பாவிடம், ‘பொண்ணுக்கு கல்யாணத்தை அப்புறம் பண்ணிக்கலாம், இப்போ படிக்க அனுப்புங்க’ என்று புரியவைக்கலாம். இப்படி... இடப்பெயர்வால் நாம் கற்றவற்றை, பெற்றவற்றை அவர்களுக்கும் சேர்ப்பிக்கலாம்.
சூரியன், உழவு, கால்நடைகளுக்கான நன்றியுடன் கூடவே… இப்பண்டிகை நமக்குச் சொல்லும் இன்னொரு முக்கியச் செய்தி... பழையன கழிதல், புதியன புகுதல்! பாரம்பர்யங்களில் நாம் பெருமைப்படும் அதே நேரம்... புதியனவற்றையும் வரவேற்று ஏற்றுக்கொள்வோம். பழையன வழிவிடுவதால்தானே புதியன பிறக்கின்றன தோழிகளே?! பொருள்கள் முதல் எண்ணங்கள் வரை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அப்படித்தான் மனித இனம் இத்தனை நூற்றாண்டு களாகத் தன்னை தகவமைத்து இங்கு வந்தடைந்திருக்கிறது. எனவே, தொழில்நுட்பம் முதல் உறவுப் பரிமாணங்கள் வரை புதியவற்றை ஏற்பதில் எப்போதும் நமக்கிருக்கும் ஒரு தேக்கம், தயக்கத்தை விடுப்போம்... நவீனத்தின் பிள்ளைகளாவோம் தோழிகளே!
தை... தழைக்கட்டும்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்