Siragadikka Aasai: பிரச்னையை விஜயா மீது திருப்பி விட்ட ரோகிணி; முத்துவின் பிளாஷ்...
நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் பங்கேற்பு!
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இரா. நல்லகண்ணுவின் பிறந்த நாள் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கலந்து கொண்டார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நல்லகண்ணுவின் நூறாவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த விழாவில் நேரில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி, நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
“பொதுவுடைமை அமைப்புக்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது.
நான் இங்கு வாழ்த்த வரவில்லை, வாழ்த்து வாங்க வந்திருக்கிறேன். எல்லாருக்கும் எல்லாம், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெற உறுதுணையாக பக்கபலமாக இருப்பவர் நல்லகண்ணு.
அமைதியாக, அடக்கமாக, ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்தக் கூடியவர் நல்லகண்ணு. தொடர்ந்து, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டி துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தின் மதசார்பற்ற கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல நிரந்தரக் கூட்டணி. தற்போதைய சூழலில், 200 அல்ல அதற்கு மேலும் வெல்வோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : சுனாமி நினைவு நாள்! 20 ஆண்டுகளாக மறையாத துயரம்!!
இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.