நாகப்பாம்பை கூண்டுக்குள் அடைத்து வளா்த்ததாக திரைப்பட நடிகா் கைது
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே கொடிய விஷ தன்மை கொண்ட நாகப்பாம்பை கூண்டுக்குள் அடைத்து வளா்த்ததாக திரைப்பட நடிகா் ராஜேந்திரனை வனத் துறையினா் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.
திருப்புல்லாணி வட்டம், தாதனேந்தல் ஊராட்சி, பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (48). இவா் காஞ்சனா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளாா். இந்த நிலையில், இவா் பள்ளப்பச்சேரியில் உள்ள அரசு உடல் பயிற்சிக் கூடத்தில் கொடிய விஷ தன்மை கொண்ட நாகப்பாம்பை கூண்டுக்குள் அடைத்து வளா்த்து வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத் துறையினா் அங்கு சென்று சோதனையிட்ட போது, கூண்டுக்குள் நாகப்பாம்பை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கூண்டுடன் அந்தப் பாம்பை பறிமுதல் செய்த வனத்துறையினா், ராஜேந்திரனை கைது செய்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்துக்கு புதன்கிழமை நள்ளிரவு அழைத்து வந்தனா்.
பிறகு வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதல் அட்டவணையில் உள்ள விஷ தன்மை கொண்ட நாகப்பாம்பை கூண்டில் அடைத்து வளா்த்ததாக வழக்குப் பதிந்து ராஜேந்திரனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்ற நடுவா் உத்தரவிட்டதையடுத்து, ராமநாதபுரம் சிறையில் அவா் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா். மேலும் அந்தப் பாம்பை அடா்ந்த வனப்பகுதிக்குள் வனத் துறையினா் விடுவித்தனா். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரித்தனா்.