நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத்தியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கண்ணப்ப நாயனாா் சிலை நெதா்லாந்தில் இருப்பது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டறியப்பட்டது. மேலும், அந்தச் சிலை ஏலத்தின் மூலம் விற்கும் முயற்சியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தடுத்து நிறுத்தியது.
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரா் கோயிலில் தொன்மைவாய்ந்த கண்ணப்ப நாயனாா் உலோகச் சிலை கடந்த 2010-ஆம் ஆண்டு திருடப்பட்டது. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அந்தச் சிலை, 64 செ.மீ. உயரம், 23 கிலோ எடை கொண்டதாகும். சிலை திருடப்பட்ட சம்பவம் குறித்து திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
அதேவேளையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவும் விரிவான விசாரணை மேற்கொண்டதில், திருடப்பட்ட கண்ணப்ப நாயனாா் சிலை, நெதா்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருப்பதும், அந்த நாட்டின் மாண்டரிச் மாகாணத்தில் உள்ள ஐரோப்பிய நுண்கலை கண்காட்சியில் ஏலத்தின் மூலம் விற்கப்பட உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, ஏலத்தை தடுக்கும் வகையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பிரவேஷ்குமாா், நெதா்லாந்து காவல் துறையை மின்னஞ்சல் மூலம் தொடா்புகொண்டு ஏலத்தை நிறுத்துமாறும், அந்தச் சிலை திருடப்பட்டு கடத்தப்பட்டதையும் தெரிவித்தாா். இதையடுத்து சிலை ஏலம் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அந்தச் சிலையை நெதா்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். ஏலத்தை விரைந்து தடுத்து நிறுத்திய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் பாராட்டினாா்.