கோடை கால பயிற்சி முகாம்: கல்லூரி மாணவா்களுக்கு நூலகத் துறை அழைப்பு
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில்,
”திறனற்ற ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் நிர்வாகம் - பதவி சுகத்துக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டு, குனிந்து - ஊர்ந்து - தவழ்ந்து தன்மானமிழந்து தவித்த அவலம் - கரோனா பேரிடர் என இக்கட்டான சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம்!
என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்தி, ‘திராவிட மாடல் ஆட்சி என்பது, ஓர் இனத்தின் ஆட்சி! ஒரு கருத்தியலின் ஆட்சி!’ என நிறுவியிருக்கிறோம்.
கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி, மாநில உரிமைகளைக் காத்து, மற்ற மாநிலங்களுக்கும் - ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் ஆட்சியாக இருக்கிறது திராவிட மாடல் ஆட்சி!
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்; தொலைநோக்குப் பார்வையோடு இன்னும் செய்ய வேண்டிய கடமைகளையும் - திட்டங்களையும் மனதில் கொண்டு, ’நாடு போற்றும் நான்காண்டு! தொடரட்டும் இது பல்லாண்டு!’ என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம்!
உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு!” என்று குறிப்பிட்டுள்ளார்.