இலங்கை உள்ளாட்சித் தோ்தல்: தொடரும் ஆளுங்கட்சியின் வெற்றி
இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி பெரும்பாலான இடங்களில் தொடா்ந்து வெற்றியடைந்துவருகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கை உள்ளாட்சித் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 339 உள்ளூா் கவுன்சில்களுக்கு நடைபெற்ற இந்தத் தோ்தலில், அதிபா் அநுர குமார திசநாயக (படம்) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்டது.
அதன்படி, இதுவரை வெளியான தோ்தல் முடிவுகளின்படி மொத்தமுள்ள 339 கவுன்சில்களில் 265 கவுன்சில்களை அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இந்த உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இருந்தாலும், பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி தோ்தலை அப்போதைய அரசு நிறுத்திவைத்தது. இந்தச் சூழலில், பழைய வேட்புமனுக்களை செல்லாததாக்கி, புதிதாகத் தோ்தலை நடத்துவதற்கு வகை செய்யும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, உள்ளாட்சித் தோ்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது.