சித்திரைத் திருவிழாவில் பலியானோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்: அமைச்...
ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அருள்மிகு குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.19 மணிக்கு பிரவேசம் செய்தார். இதனைமுன்னிட்டு நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பார்க்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.
இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது.
அசுரர்களால் தேவருக்கு நேர்ந்த இடுக்கண்களை களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் உண்டாயிற்று. அம்மையார் தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. அம்மை திருமணம் நடந்த இடத்திற்கு இன்று திருமணமங்கலம் எனப் பெயர் வழங்கப்பெறுகிறது. மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்கபெருமானுக்கு பரிவாரத்தலமாக விளங்குகிறது. பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது. முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் நிர்மானிக்கப்பட்டதாகும் இத்திருக்கோயில்.
அமைச்சர் செய்த சிவ புண்ணியத்தில் பாதியேனும் மன்னருக்கு தத்தம் செய்து தரும்படி கேட்க ,மறுத்த அமைச்சருக்கு சிரச்சேதம் ஏற்பட்டது. இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல முர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்ததாக வரலாறு கூறுகிறது.
தல மூர்த்திகள் :-
அருள்மிகு கலங்காமற் காத்த விநாயகர்.
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்.
அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, உமையம்மை.
அருள்மிகு குருதெட்சிணாமூர்த்தி.

தலச்சிறப்பு :-
திருஇரும்பூளை மற்றும் ஆலங்குடி என்ற பெயர்களால் விளங்கப்பெறுவது. திருஞானசம்பந்த பெருந்தகையால் எழிலார் இரும்பூளை என அருளப்பெற்றது. பார்க்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்கள் ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.
இவ்வூரில் விஷத்தால் எவருக்கும் யாதொரு தீங்கும் ஏற்பட்டதில்லை.
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் வருடம் தோறும் குருபகவான் ஒருராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டும் இன்று (மே 11 ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை குருபாகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.
குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலையும்,ஞாயிற்றுக்கிழமை அதிகாலையும் உலகநன்மை வேண்டி குருபரிகார ஹோமங்கள் நடைபெற்றது.
ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சுவாமிநாத சிவாச்சாரியார்,ஞானஸ்கந்த சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களைச்சொல்லியும்,ஓதுவார் தேவாரம் பாடியும் ஹோமங்களை நடத்தி வைத்தனர். அதனைத்தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. குருபகவானுக்கு 108 கலசஅபிஷேகம் நடைபெற்றது.
கலங்காமற்காத்த விநாயகர்,ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி அம்மன், சனீஸ்வரபகவான் சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மூலவர் குருபகவான், உற்சவர் குருபகவான் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.19 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்சியடைந்த போது குருபகவானுக்கு சிறப்பு மகாதீபாராதனை காட்டப்பட்டது.முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை மனமுருகி வழிபட்டனர்.
பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினி பாராட்டு
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கருண்கரட் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
இதனை முன்னிட்டு குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா மே மாதம் 15 ம் தேதி முதல் மே 22 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேஷம்,மிதுனம், கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம் ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்துகொள்ளலாம் என கோயில் தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நா.சுரேஷ் ,தக்கார் வீ.சொரிமுத்து, கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.