அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்காக போரை நிறுத்திய ஆப்கானிஸ்தான் அதிபர் மகள்!
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இப்போது போர்பதட்டம் நிலவி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பு ஒன்றுக்காக உள்நாட்டு போர் நிறுத்தப்பட்ட சம்பவம் இப்போது நினைவுகூர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானோடு இந்தியாவிற்கு எப்போதும் பகை இருந்தாலும், ஆப்கானிஸ்தானோடு எப்போதும் இந்தியாவிற்கு உறவு இருந்து வருகிறது.
தற்போது தாலிபான் அங்கு ஆட்சி செய்து வந்தாலும், தாலிபான்களோடு இந்தியா தூதரக உறவை தொடர்ந்து துண்டிக்காமல் இருக்கிறது. அதோடு ஆப்கானிஸ்தானில் மீண்டும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் அமிதாப் பச்சன் படப்பிடிப்பு
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்காக 1990-களில் ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார். அந்நேரம் அரசு படைகளுக்கும், உள்நாட்டு முஜாஹிதீன் படைகளுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது.
அமிதாப்பச்சன் படப்பிடிப்புக்காக ஆப்கான் வந்திருப்பது குறித்து அந்நாட்டு அதிபர் மொகமத் நஜ்புல்லாவின் மகளுக்கு தெரிய வந்தது. உடனே அவர் தனது தந்தையிடம் பேசி, போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

போர் நிறுத்தம் அமலானால் அமிதாப்பச்சன் காபூல் வருவார் என்றும், அவரை மக்கள் பார்க்க முடியும் என்று தனது தந்தையிடம் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அமிதாப்பச்சனும், அவருடன் வந்தவர்களும் படப்பிடிப்பு நடத்த ஆப்கான் அரசு தேவையான பாதுகாப்பை செய்து கொடுத்தது. படப்பிடிப்பு குழுவினருடன் அமிதாப்பச்சன் சென்றபோது முன்னாலும், பின்னாலும் ராணுவ டேங்குகள் அணிவகுத்துச் சென்றன.
படப்பிடிப்பு காபூல் மற்றும் மஜார்-இ-ஷெரீப் போன்ற நகரங்களில் நடந்தது. அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரப்பானியும் அமிதாப்பச்சனுக்கு நேரில் வந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஆப்கான் தூதர் ஒரு அளித்த பேட்டியில் இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, இந்தியாவில்பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும் அமிதாப்பச்சனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இதனால், குதா கவா என்ற படப்பிடிப்பு ஆப்கானிஸ்தானில் நடக்க, அமிதாப்பச்சனுக்காக ராஜீவ் காந்தி ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்பாடு செய்து கொடுத்தார்.

1992-ம் ஆண்டு படம் வெளியானது. ஆனால் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதனால் குதா கவா படம் அமிதாப்பச்சனுக்கு மறக்க முடியாத ஒரு படமாக அமைந்துவிட்டது.
டெல்லியில் குதா கவா படத்தின் அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொண்ட அமிதாப்பச்சன் ராஜீவ் காந்தியை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்.
ஆனால், அதன் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அரசை விமர்சித்து அமிதாப்பச்சன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அதோடு காங்கிரஸ் கட்சியுடனான உறவையும் அமிதாப்பச்சன் வெகுவாக குறைத்துக் கொண்டார்.