சுவாமிமலையில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகும். இங்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும். இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிக்கட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம். இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழா நாள்களில் தினமும் காலை, மாலை இரு வேளையும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. கடந்த 7 ஆம் தேதி காலை தன்னைத்தானே பூஜித்தலும் இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி வள்ளி - தெய்வானையுடனும் தேரில் எழுந்தருளினர். மங்கள வாத்தியங்கள் முழங்கத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். நாளை 10ம் நாளான காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.