ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்!
புது தில்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை உடனடியாகக் கூட்ட பிரதமருக்கு நாடாளுமன்ற இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை உடனடியாகக் கூட்ட வேண்டும்’ என்ற எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்திகொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், அதன்பின் ஏற்பட்டுள்ள சண்டை நிறுத்தம் ஆகியவைக் குறித்து மக்களும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்தில் விவாதிப்பது முக்கியமானது. இதன்மூலம், இனி எதிர்வரும் சவால்களை எதிர்கொள்வதற்கான நமது கூட்டு முயற்சியை வெளியுலகுக்கு காட்ட முடியும்.
இந்த கோரிக்கையை தீவிரமாகவும் உடனடியாகவும் நிறைவேற்ற கருத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.