விழுப்புரம்: மேடையில் மயங்கி விழுந்த விஷால்; ``முழுமையான ஓய்வு தேவை'' - மருத்துவமனை சொல்வதென்ன?
நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விஷால் மயங்கி விழுந்தது பேசுபொருளாகி உள்ளது.
விழுப்புரத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில், நேற்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் மிஸ் திருநங்கை அழகிப் போட்டி நடைபெற்றது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் நடந்த இந்த விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார்.
மேடையில் பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது, மேடையிலேயே அவர் மயக்கமடைந்து விழுந்தார். பின்னர், அவரது ஆதரவாளர்கள் அவரை மேடையில் இருந்து அழைத்துச் சென்றனர்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, சந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியானது.
இந்தப் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, விஷாலின் கைகள் நடுங்கியபடி இருந்தன. இதற்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டது.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகி, "விஷால் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு, முழுமையாக ஓய்வெடுக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.