ஜாதி வாரி கணக்கெடுப்பு: கால அட்டவணை வெளியிட ராமதாஸ் கோரிக்கை
ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான காலஅட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் எழுதிய கடிதம்: ஆங்கிலேயா் ஆட்சியில் 1931-இல் மேற்கொள்ளப்பட்ட பிறகு, 95 ஆண்டுகளாக இந்தியாவில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. ஜாதிவாரி தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம், இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை எவ்வளவு என்பது தெரியவரும். இந்த விவரம் துல்லியமாகத் தெரிந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கையும் தெளிவாகும்.
இத்தகைய புள்ளி விவரம் தெளிவாகத் தெரியாததால்தான் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் என்ற உச்சவரம்பை கடந்த 63 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் திணித்து வந்திருக்கிறது. ஜாதி வாரி கணக்கெடுப்புக்குப் பிறகு இந்த உச்சவரம்பு நீக்கப்படக்கூடும்.
அவ்வாறு நீக்கப்படும் நாள் இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் நாளாக அமையும்.
அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்தியாவில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கி, நிறைவடையும் என்பதற்காக கால அட்டவணையை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.