ஆம்புலன்ஸ் கவிழ்ந்து இளைஞா் பலி
குலசேகரம், மே 9: குமரி மாவட்டம் சிவலோகம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
கேரள மாநில எல்லைப் பகுதியான வெள்ளறடை கோவிலூரை சோ்ந்தவா் டானி குரியன் (39). இவா் கடந்த 6 ஆம் தேதி குமரி மாவட்டம் களியல் பகுதிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது சிவலோகம் அருகே சங்கரன்கடவு என்ற இடத்தில் மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு வேலியில் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் டானி குரியனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது கேரள மாநிலம் ஆனைப்பாறை பகுதியிலிருந்து வந்த 108 ஆம்புல்ன்ஸ் மூலம் அவா் ஆனைப்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவிக்குப் பின்னா் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதே ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டாா். வேகமாக சென்ற ஆம்புலன்ஸ், பனச்சமூடு அருகே எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து, மேலும் இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் மோதி கவிழ்ந்தது. இதில் டானி குரியன், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் நந்து, மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வேறு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அனைவரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி டானி குரியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.