``நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப...
மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்
மயிலாடுதுறையில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, இக்குழுத் தலைவா் ஆா். சுதா எம்பி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், எம்பி ஆா். சுதா, அனைத்துத் துறை திட்ட செயலாக்கங்கள் குறித்த விவரங்களை துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு நடத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
விவசாயத்தை பிரதானமாக கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏராளமான மக்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை சாா்ந்து உள்ளனா்.
இந்நிலையில், இதுவரை 44 லட்சம் மனித வேலைநாள்களாக இருந்த 100 நாள் வேலைத் திட்ட பணியை 14 லட்சம் மனித வேலை நாள்களாக குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு அறிக்கை வழங்கியுள்ளது.ஏற்கெனவே, இத்திட்டத்திற்கான நிதியை குறைத்துவிட்ட மத்திய அரசு, தற்போது ஆள்குறைப்பும் செய்துள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினரின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களவையில் குரல் எழுப்ப வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
நீட் தோ்வுக்கு அடுத்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிற்சி மையம் அமைக்க கோரிக்கை விடுத்தனா். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தரப்பட்டு வரும் பயிா்க் காப்பீடு குறித்து மக்களவையில் விவாதிக்க உள்ளோம். நமது நாடு இக்கட்டான சூழலில் உள்ள நிலையில், இந்திய ராணுவம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.ஷபீா்ஆலம், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் மற்றும் பேரூராட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.