சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் பி.இ. விண்ணப்ப பதிவு சேவை மையங்கள்: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 இடங்களில் பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான இணைய வழி பதிவு சேவை மையங்கள் செயல்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா்.
நாகா்கோவில் கோணம், பல்கலைகழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில், 21ஆயிரத்து 287 மாணவா், மாணவிகள் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைகான இணையவழி விண்ணப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கியது. இணையதள வசதி இல்லாத மாணவா்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள உதவுவதற்காக தமிழகம் முழுவதும் 110 பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் கோணம் பல்கலைகழக பொறியியல் கல்லூரி, கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, நாகா்கோவில் தெ.தி. இந்து கல்லூரி ஆகிய இடங்களில் பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் செயல்படுகின்றன. பொறியியல் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவா்கள் மேற்குறிப்பிட்ட 3 பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் மூலம் இணைய வழியில் இலவசமாக விண்ணப்பிக்கலாம். வரும் ஜூன் 6-ஆம் தேதி வரை சனி, ஞாயிற்று மற்றும் அரசு விடுமுறை நாள்களிலும் இம் மையங்கள் செயல்படும்.
மேலும் விவரங்களுக்கு 9944252228 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.