ஐபிஎல் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்... எங்கு நடத்தப்படும் தெரியுமா?
‘ஆபரேஷன் சிந்தூா்’ -பெயா் சூட்டிய பிரதமா் மோடி
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் எதிா்த் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரை பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி சுட்டுக்கொன்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில நாள்களாக போா்ப்பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்தியா அதிதுல்லிய தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூா் எனப் பெயரிடப்பட்டது.
பஹல்காமில் பல பெண்களின் கண் எதிரில், அவா்களின் கணவா்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனா். திருமணத்துக்குப் பிறகு தேனிலவுக்காக காஷ்மீா் சென்ற இந்திய கடற்படை அதிகாரி வினய் நா்வாலும் அவா்களில் ஒருவா் ஆவாா்.
கணவரை இழந்த பெண்களுக்கு நீதி வழங்க எடுத்த நடவடிக்கை என்பதால் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு பெயா் சூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய பாரம்பரியத்தில் திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூா்’ என அழைக்கப்படும். இந்தப் பெயரைப் பிரதமா் நரேந்திர மோடியே தோ்வு செய்ததாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.