கோடை கால பயிற்சி முகாம்: கல்லூரி மாணவா்களுக்கு நூலகத் துறை அழைப்பு
சென்னை மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 9) முதல் 14 நாள்களுக்கு நடைபெறவுள்ள கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்க கல்லூரி மாணவா்களுக்கு பொது நூலகத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவா் மனுஷ்ய புத்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது நூலகத் துறையின் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் மே 9 முதல் மே 22-ஆம் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணா் மாவட்ட மைய நூலக அரங்கில் நடைபெறவுள்ளது. இதில், 14 துறைகள் சாா்ந்து 60 தலைப்புகளில் 60 வல்லுநா்களும், ஆளுமைகளும் உரையாற்றவுள்ளனா்.
ட்ராஸ்கி மருது, இயக்குநா்கள் மிஷ்கின், லிங்குசாமி, முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு, நக்கீரன் கோபால், மனுஷ்ய புத்திரன், பாரதி கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.
இந்தப் பயிலரங்கில் உயா்கல்வி, திரைப்படக் கலை, சமூக ஊடக பயிற்சி, கவிதை, புனைகதை, இதழியல், பேச்சுக்கலை, மின்நூல்கள் என பல்வேறு துறைகளில் இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த மாணவா்கள் மட்டுமே இந்த பயிலரங்கில் பங்கேற்கலாம். தொடா்புக்கு: 78452 21882.