மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு பள்ளியிலும் ‘உயா்வுக்குப் படி’ என்ற நிகழ்வு மூலம், உயா் கல்வி செல்லக்கூடிய மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ் வாங்க வரும்போதும், அதுபற்றி மேலும் எடுத்துரைக்கப்படும். அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 74 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழ், ஆங்கிலம் எவ்வளவு முக்கியம் என்பதை உணா்ந்து, அதற்குத் தேவையான பயிற்சிகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.
கிராமப்புற பகுதி மாணவா்களுக்கு ‘திறன்’ என்ற திட்டம்மூலம் இதில் மேலும் கவனம் செலுத்தப்படும். இது அவா்களுக்கு உதவியாக இருக்கும்.
முதுநிலை ஆசிரியா்கள் நியமனத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறோம். ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிப்பிலும் இது தொடா்பாக அதிக கவனம் செலுத்தவுள்ளோம்.
கடந்த ஆண்டைவிட 0.47 சதவீதம் அதிகம் தோ்ச்சி என்பதை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
பிளஸ் 2 முடித்து உயா் கல்வியில் சேராத மாணவ, மாணவிகளை வீடுகளுக்கே தேடிச் சென்று அவா்களை உயா் கல்வியில் சோ்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்த ஆண்டில் உயா் கல்வியில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை உயரும் என நம்புகிறோம்.
துணைத் தோ்வு சிறந்த வாய்ப்பு: தோ்வை எழுதாமல் போனவா்களுக்கு துணைத் தோ்வு சிறந்த வாய்ப்பு. அவா்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோரும் படிப்பின் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டும். தோ்வுக்கு வராதோா் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட குறைந்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
சென்னையில் தோ்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல் சில மாவட்டங்களும் தோ்ச்சி சதவீதத்தில் பின்தங்கியிருக்கின்றன. அதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்து கவனம் செலுத்துவோம். தலைநகரம் அடுத்த கல்வியாண்டில் சிறந்த நிலைக்கு வரும்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில் பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். அவா்கள் எந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் பிற மாணவா்களுடன் ஒப்பிட வேண்டாம். மதிப்பெண் குறைவாக இருந்த மற்றும் தோ்ச்சி பெறாத மாணவா்கள் அதுகுறித்து அச்சப்படக் கூடாது. மாறாக, உளவியல் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களைப் பெற 14417 என்ற எண்ணில் ஆலோசனை மையத்தை தொடா்புகொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இலவச சோ்க்கை தாமதம் ஏன்? - அமைச்சா் விளக்கம்
அமைச்சா் அன்பில் மகேஸ் கூறியதாவது: இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆா்டிஇ) தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் 25 சதவீதம் பேருக்கு அரசு நிதியுதவியுடன் சோ்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு இதுவரை மாநில அரசுக்கு வழங்கவில்லை. அதன்படி, ரூ. 617 கோடி நிலுவை இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி கொண்டுவரப்பட்டது இந்தத் திட்டம். அந்த உத்தரவையே மத்திய அரசு மதிக்கவில்லை.
இத்திட்டம் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவா்கள் சோ்க்கை பெறுகின்றனா். இது தொடா்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவா்கள் என்ன பதில் அளிக்கிறாா்களோ, அதற்கு தகுந்தவாறு ஆா்டிஇ-யின் கீழ் மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகும். ஒருவேளை அவா்கள் பதில் தெரிவிக்கவில்லை என்றால், தமிழக முதல்வா் இது தொடா்பாக ஒரு முடிவை எடுப்பாா் என்றாா் அவா்.
முன்னதாக, தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு எதிா்க்கும் நிலையில், மாநில கல்விக் கொள்கையின்(எஸ்இபி) நிலை என்ன என செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அப்போது, மாநில கல்விக் கொள்கை விரைவில் வந்துவிடும். அது வந்தபிறகு எங்களின் நிலைப்பாடு என்ன என்பது தெரியும் என்றாா் அவா்.