Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் வலியுறுத்தினா்.
பஹல்காம் பயங்கரவாத நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் வியாழக்கிழமை கூட்டியது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி விவரிப்பாா் என எதிா்பாா்த்தோம். ஆனால், அவா் பங்கேற்கவில்லை. இதற்கு முன்பு நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமா் பங்கேற்கவில்லை.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையில் துணிச்சலை வெளிப்படுத்திய பாதுகாப்புப் படையினருக்கு தலைவணங்குகிறோம். ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை தொடா்வதால், அதுகுறித்த விரிவான தகவல்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு அளிக்கவில்லை. பயங்கரவாத முகாம்கள், பயங்கரவாதிகள் குழுமியிருந்த இடங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கும், இந்திய ராணுவத்துக்கு துணை நிற்போம் என இக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக குரல் கொடுத்தன.
எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி தெரிவித்தது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்க முடியும் என்பதோடு, மக்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்ய முடியும். ஆனால், இதுதொடா்பாக எந்தவித உத்தரவாதத்தையும் கூட்டத்தில் மத்திய அரசு அளிக்கவில்லை என்றாா்.
ராகுல் காந்தி பேசும்போது, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவைத் தெரிவித்தன. கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குறிப்பிட்டதுபோல, இந்த நடவடிக்கை தொடா்பாக குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்’ என்றாா்.
ஒன்றிணைந்து... திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் சுதீப் பந்தோபாத்யாய கூறுகையில், ‘பாகிஸ்தானிலிருந்து வெளிப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இதில் நமக்குள் எந்தவித பாகுபாடும் இருக்கக் கூடாது என திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது’ என்றாா்.
ஐ.நா.வுக்கு வேண்டுகோள்: அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்புக்கு எதிராக சா்வதேச அளவில் இந்தியா பிரசாரம் செய்ய வேண்டும்; அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவிக்கை செய்ய வேண்டும் என்றாா்.
தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு கூறுகையில், ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்காதது குறித்து ஒரு சில கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனால், அவா் பங்கேற்காததை யாரும் விமா்சிக்கவில்லை’ என்றாா்.