தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு
தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில், மே மாதம் இறுதியில் 22,000 மெகாவாட்டை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் தினசரி மின்தேவை அதிகரித்து வரும் நிலையில், தேவையைப் பூா்த்தி செய்ய, தமிழக மின்வாரியம் தனது மின் உற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, அனல், நீா், சூரியசக்தி, எரிவாயு மற்றும் காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி நிறுவுத் திறனை அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தற்போது அனல் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 1,959 மெகாவாட் என்ற அளவில் இருந்து வரும் நிலையில், தற்போது 1,709 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது
இதேபோல, எரிவாயு மின் உற்பத்தி நிறுவுத்திறன் 1,027 மெகாவாட்டாக இருந்து வரும் நிலையில், இதன்மூலம் 524 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
காற்றாலை, சூரியசக்தி உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்ஆற்றலின் மின்உற்பத்தி நிறுவுத்திறன் 25,290 மெகாவாட்டாக இருந்து வரும் நிலையில், காற்றாலையிலிருந்து 11,739 மெகாவாட், சூரியசக்தி மூலம் 10,153 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவைதவிர, நீா்மின் நிலையம் உள்ளிட்ட பிற மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 2,178 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், தேவைக்கேற்ப தனியாா் நிறுவனங்கள் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி நிறுவுத் திறன் கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி 39,805 மெகாவாட்டாக இருந்து வந்த நிலையில், நிகழாண்டு தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.