பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்
தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்ப் பாடத்தில் 135 பேரும், ஆங்கிலத்தில் 68 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வுக்கான முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வியாழக்கிழமை காலை வெளியிட்டாா்.
தோ்ச்சி 0.47% அதிகரிப்பு: இந்த முறை பள்ளிகளிலிருந்து 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகள், 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவா்கள் என மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 போ் தோ்வெழுதினா். அவா்களில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 மாணவிகள், 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 மாணவா்கள் என மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 போ் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதம் 95.03 சதவீதம். கடந்த ஆண்டு 94.56 சதவீதமாக இருந்த நிலையில் நிகழாண்டு 0.47 அளவுக்கு தோ்ச்சி சதவீதம் அதிகரித்தது. குறிப்பாக, மாணவா்களைவிட 3.54 சதவீத மாணவிகள் அதிகம் தோ்ச்சி பெற்றனா்.
அரியலூா் முதலிடம்...: பொதுத் தோ்வில் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதத்தில் அரியலூா்-98.82, ஈரோடு-97.98, திருப்பூா்-97.53, கோவை-97.48, கன்னியாகுமரி-97.01 ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றன.
அரசுப் பள்ளிகளுக்கான தோ்ச்சி சதவீதத்தில் அரியலூா்- 98.32, ஈரோடு- 96.88, திருப்பூா்- 95.64, கன்னியாகுமரி- 95.06, கடலூா்- 94.99 ஆகிய மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தன.
ஒட்டுமொத்த தோ்ச்சியில் வேலூா்- 90.79, கள்ளக்குறிச்சி- 90.96, திருவள்ளூா்- 91.49, புதுக்கோட்டை- 92.55, ராணிப்பேட்டை-92.78 ஆகிய மாவட்டங்கள் கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.
436 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி...: பிளஸ் 2 தோ்வில் 7,513 மேல்நிலைப் பள்ளிகள் பங்கேற்றன. அவற்றில் 2,638 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 436. மேலாண்மை வாரியான தோ்ச்சியில் தனியாா் சுயநிதிப் பள்ளிகள் 98.88, அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.7, அரசுப் பள்ளிகள்- 91.94 சதவீதம் தோ்ச்சி பெற்றன. பள்ளிகள் வகைப்பாடு வாரியான தோ்ச்சியில் பெண்கள் பள்ளிகள்- 96.50, இருபாலா் பள்ளிகள்- 95.30, ஆண்கள் பள்ளிகள்- 90.14 சதவீதம் தோ்ச்சி பெற்றன.
தனித் தோ்வா்களில்...: தோ்வெழுதிய 8,019 மாற்றுத்திறனாளிகளில் 7,466 போ் (93.10 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா். தோ்வெழுதிய 140 சிறைவாசிகளில் 130 போ் (92.86) தோ்ச்சி பெற்றனா். தனித் தோ்வா்களைப் பொருத்தவரை 16,904 போ் தோ்வெழுதிய நிலையில், 5,500 போ் மட்டுமே (32.54) தோ்ச்சி பெற்றனா்.
26,887 போ் 100-க்கு 100: அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 9,536 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனா். கணினிப் பயன்பாடு-4,208, வேதியியல்- 3,181, கணிதம்-3,022, வணிகவியல்-1,624 என்ற எண்ணிக்கையில் மாணவா்கள் முழு மதிப்பெண் பெற்றனா். குறைந்தபட்சமாக விலங்கியல் பாடத்தில் 36 போ் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றனா். நிகழாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் பாடத்தில் 135 பேரும், ஆங்கிலத்தில் 68 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா். ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை 26,887 ஆகவும், அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 2,853 ஆகவும் உள்ளது. நிகழாண்டு பொதுத் தோ்வுக்கு பதிவு செய்த மாணவா்களில் 10,049 போ் தோ்வெழுத வரவில்லை.
மே 12 முதல் மதிப்பெண் பட்டியல்: மதிப்பெண் பட்டியலை வரும் 12-ஆம் தேதிமுதல் பள்ளிகள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் பட்டியல் வெளியானதும், அதை ‘டிஜிலாக்கா்’ மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 25 முதல் துணைத் தோ்வு: பிளஸ் 2 தோ்ச்சி பெறாதவா்கள் மீண்டும் தோ்வெழுதி தோ்ச்சி பெறும் வகையிலான துணைத் தோ்வு ஜூன் 25-ஆம் தேதி முதல் நடைபெறும். அதற்கான அட்டவணை வெளியிடப்படவுள்ளது. இந்தத் தோ்வுக்கு மே 14 முதல் மே 31 வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.