இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூட்டறிக்கை
சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பஹல்காமில் தாக்குதலுக்கு உள்ளானவர்களை மீட்பதிலும் பாதுகாப்பதிலும் காஷ்மீரிகள் தீரத்துடன் வெளிப்படுத்திய அக்கறையும் மனிதநேயமும் பயங்கரவாதத்திற்கு எதிரானவை. அமைதியிலும் நாட்டு ஒற்றுமையிலும் அக்கறையுடன் பெரும் பங்காற்றிவரும் காஷ்மீரிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக அவர்களை பயங்கரவாதிகளுடனும் பாகிஸ்தானுடனும் தொடர்புபடுத்தும் வெறுப்புக் கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம்.
பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் மத அடையாளத்தைக் கேட்டு உறுதி செய்துகொண்ட பிறகே சுட்டுக்கொன்றதாக பொய்த்தகவலைப் பரப்பி இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் சிலரது முயற்சியை முறியடித்துள்ள இந்திய மக்களின் அறிவுமுதிர்ச்சியான அணுகுமுறையை நாங்கள் மதிக்கிறோம்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக களையப்பட்டு இனியொரு பயங்கரவாதச்செயல் இந்த மண்ணில் நிகழாது என்கிற நிலையை உறுதிப்படுத்த வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஓர் இயங்கு தளமாக இருக்கக்கூடாது என்கிற இந்தியாவின் நிலைப்பாடு சமரசத்திற்கு அப்பாற்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும் அவர்களுக்குப் பின்னேயுள்ள நாசகரச் சக்திகளையும் சர்வதேச சமூகத்தின் முன்னால் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தவும் தண்டிக்கவும் இந்தியாவுக்கு உரிமையுள்ளது. அத்தகைய நிலையை உருவாக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா பயன்படுத்தும் என்றும், சர்வதேச விசாரணைக்கு முன்வருவதாக பாகிஸ்தான் அறிவித்த நிலையில் அதையும் இந்தியா ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் 2025 மே 7ஆம் தேதி “ஆபரேஷன் சிந்தூர்” என்ற நேரடி நடவடிக்கையை மேற்கொண்டது. (குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் பார்வையில் பெண்ணின் சுமங்கலித் தன்மையுடன் தொடர்புபடுத்தப்படும் சிந்தூர் - நெற்றித்திலகம் என்று பெயரிடப்பட்டதில் நாட்டின் மதச்சார்பற்ற, பாலினச் சார்புநிலையற்ற பொதுப்படைத்தன்மை வெளிப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.)
நல்லுறவு, அமைதி மற்றும் மனிதகுல முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ள எழுத்தாளர்களும் கலைஞர்களுமாகிய நாங்கள் இந்தியா - பாகிஸ்தானிடையே இப்போது நிலவும் போர்ச்சூழல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளோம்.
போர் இருதரப்பிலும் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கிறது. மனிதர்கள் இரத்தம் மண்ணில் சிந்துவதைத் தவிர போரின் சாதனை எதுவுமில்லை. போரின் சுமை யாவும் பொதுமக்களின் மீது விழும். போர் எளிய மக்களின் உயிர் மற்றும் உடமைகளை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது. போர் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது.
அதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், பொருளாதாரப் பின்னடைவு, சூழலியல் கேடு மற்றும் தீராத அமைதியின்மைக்குள் நாட்டைத் தள்ளிவிடும். மதரீதியான மோதல்களுக்கும், வெறுப்பரசியலுக்கும் வழிவகுத்துவிடும் எனக் கடந்தகால அனுபவங்களிலிருந்து கவலைகொள்கிறோம்.
போரினால் உலகளாவிய அளவில் ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில்கொண்டு, இருநாட்டு அரசுகளும் போர் பதற்றத்தை தணிக்கவேண்டும் என்றும் சட்டரீதியாகவும் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் மூலமும் தீர்வு காண வேண்டும் என்றும் கோருகிறோம். போருக்கு எதிராக அமைதியைக் கோருவது சமூக அக்கறை கொண்ட அனைவரது கடமை. நாட்டின் எல்லைகளைத் தாண்டி மனிதநேயம் மற்றும் மனிதவுரிமைகளுக்காக உயர்கிறது எமது குரல்.
இவண்,
எஸ்.வி.ராஜதுரை
முனைவர். து.ரவிக்குமார் எம்.பி
கலாப்ரியா
வண்ணதாசன்
பெருமாள் முருகன்
இமையம்
சுப்ரபாரதிமணியன்
சுகுமாரன்
பேரா மு.ராமசாமி
விஜயசங்கர் ராமச்சந்திரன்
முனைவர் க.பஞ்சாங்கம்
முனைவர் கோ.ரகுபதி
முனைவர் இரா.காமராசு
பேரா.முரளி
ஆர்.ஆர்.சீனிவாசன்
சல்மா
பவா செல்லதுரை
இளங்கோ கிருஷ்ணன்
ரோஹிணி
குட்டிரேவதி
சுகிர்தராணி
கரன்கார்க்கி
இரா.முருகவேள்
ஓவியர் விஸ்வம்
ஓவியர் ராஜசேகரன்
ஓவியர் மணிவண்ணன்
ஓவியர் கார்த்திகேயன்
ஓவியர் சந்தோஷ் நடராஜன்
ஓவியர் சரண்ராஜ்
முனைவர் அருள்செல்வி
முனைவர் அ.பகத்சிங்
ச.தமிழ்ச்செல்வன்
சுகுணா திவாகர்
கலை இயக்குனர் த. இராமலிங்கம்
இயக்குனர் சீனு ராமசாமி
இயக்குனர் அதியன் ஆதிரை
இயக்குனர் எஸ்.ஜெயக்குமார்
இயக்குனர் சந்திரா
இயக்குனர் தீபக்
வாசுகி பாஸ்கர்
பேரா அரங்கமல்லிகா
புலியூர் முருகேசன்
நிவேதிதா லூயிஸ்
அ.உமர் பாரூக்
மு.அராபத் உமர்
அ.முத்துகிருஷ்ணன்
சக்திஜோதி
யாழன் ஆதி
பேரா. ந.மணி
ம.காமுத்துரை
உதயசங்கர்
அ.கரீம்
ஒடியன் லட்சுமணன்
சம்சுதீன் ஹீரா
அரிசங்கர்
சவிதா
எதிர் அனுஷ்
க.மூர்த்தி
ஜா.மாதவராஜ்
கவின்மலர்
இனியன்
விழியன்
விஷ்ணுபுரம் சரவணன்
செல்மா பிரியதர்ஷன்
திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
சாம்ராஜ்
இரா.தெ.முத்து
எ.எம்.தீன்
வெய்யில்
பசு கவுதமன்
ஆயிஷா இரா.நடராசன்
இரா.தனிக்கொடி
கோவை சதாசிவம்
கமலாலயன்
மணிமாறன் மகிழினி
ஸ்டாலின் சரவணன்
கண.குறிஞ்சி
அவை நாயகன்
எஸ்.காமராஜ்
பிரளயன்
பேரா.பா.ஆனந்தகுமார்
அரவிந்தன்
பழ.அதியமான்
இயக்குனர் பாஸ்கர் சக்தி
வெண்புறா
பா.ஜீவசுந்தரி
சரிதா ஜோ
எஸ்.லட்சுமணபெருமாள்
பாவெல் பாரதி
கலைச்செல்வி
முத்துவேல்
இயக்குனர் கமலக்கண்ணன் எஸ்.சண்முகம்
பாலசுப்பிரமணியம் பொன்ராஜ்
பாடகர் கோவன்
மு.ஆனந்தன்
என். ஶ்ரீராம்
பேரா நா.இராமச்சந்திரன்
கவிஞர் மதிவண்ணன்
நா.முத்துநிலவன்
மு.முருகேஷ்
களப்பிரன்
கவிஞர் பூபாலன்
ஆர்.சிவக்குமார்
முரசு ஆனந்தன்
மயிலைபாலு
பாமரன்
இயக்குனர் த.செ.ஞானவேல்
அழகியபெரியவன்
மதுக்கூர் இராமலிங்கம்
ச.பாலமுருகன்
ஆதவன் தீட்சண்யா