அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்? உண்மை என்ன?
'ராக்கி', 'சாணிக் காயிதம்', 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், அடுத்து லோகேஷுடன் கைகோர்க்கிறார் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் ஒலிக்கிறது.
ஆங்கில வெப்சீரீஸான Grotesquerie பாணியில் அதீத வன்முறையைக் காட்டும் படங்களாக அருண் மாதேஸ்வரனின் 'ராக்கி', 'சாணிக் காயிதம்' போன்ற படங்கள் திகழ்ந்தன.
காரணம், தமிழில் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு ஆக்ஷன் படங்களாக அவை விளங்கின. அதனோடு ஒப்பிட்டால் அருண் அடுத்து இயக்கிய 'கேப்டன் மில்லர்' வன்முறை குறைவான படமாக அமைந்துள்ளது என்ற பேச்சு உண்டு.

இந்நிலையில் அருண்மாதேஸ்வரன் 'கேப்டன் மில்லர்' படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷை இயக்குவதற்கான அறிவிப்புகள் வெளியானது.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'இளையராஜா' பயோபிக்கில் தனுஷ் நடிக்கிறார் என்றும், அதனை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் என்றும் அறிவிப்புகள் வெளியானது.
இளையராஜாவும் அருண் மாதேஸ்வரனை அழைத்து, தனது வாழ்க்கை வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஆனால் தனுஷின் முந்தைய கமிட்மென்ட்களினால் 'இளையராஜா' பயோபிக் தள்ளிப் போனது. அருண் மாதேஸ்வரனும் விஜய்தேவரகொண்டாவின் படம், இந்தியில் ஒரு படம் இயக்குவதற்கான முயற்சிகளுக்குத் தாவினார்.

இந்நிலையில்தான் 'இளையராஜா'வின் பயோபிக்கிற்கு முன்னர் லோகேஷை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் என்ற செய்தி உலா வருகிறது.
இது குறித்து அருண் மாதேஸ்வரனின் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்தவை இவை.
''அருணின் 'ராக்கி', 'சாணிக் காயிதம்' இரண்டுமே லோகேஷிற்குப் பிடித்த படங்களாகும். வன்முறையான கதைக்களத்தோடு திரைக்கதை அமைப்பில் புது பாணியைக் கடைப்பிடிப்பது அருண் மாதேஸ்வரனின் வழக்கம்.
'ராக்கி'யில் கூட 'நான் லீனியர்' கதை சொல்லல் பாணி, அத்தியாயங்களின் வழி நகரும் காட்சிகள், அதற்கென தேர்ந்தெடுத்த சொல்லாடல்கள், சமரசமில்லாத வன்முறை என 'ராக்கி'யின் மேக்கிங் ஸ்டைல் லோகேஷை ரொம்பவே கவர்ந்தது.
ஆகவே அருண், லோகேஷைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னதும், உடனே 'ஓகே' சொல்லி விட்டார் லோகேஷ்.

அருண் மாதேஸ்வரன் இயக்குநர் ஆவதற்கு முன்னால் 'தேவதாஸ்' என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதியிருந்தார். 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பின் போது தனுஷிடம் கூட, இந்த கதையைச் சொல்லியிருந்தார்.
அந்தக் கதையைத்தான் லோகேஷிடமும் சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள். 'கூலி'யின் ரிலீஸுக்குப் பிறகு இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
லோகேஷ் அடுத்து உடனடியாக 'கைதி 2'வை இயக்க உள்ளார். இந்தச் சூழலில் அவர் கார்த்திக்குக் கொடுத்த 'கைதி 2'வை முடித்துவிட்டு லோகேஷ் வருகிறாரா அல்லது 'கூலி' வெளியீட்டுக்குப் பின், லோகேஷ் இந்த படத்திற்கு வருகிறாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.
அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக ஒரு பெரிய நிறுவனம் அறிவிக்க உள்ளதாகவும் தகவல்'' என்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...