Devayani: ``நானும் ராஜகுமாரன் சாரும் எங்க குழந்தைகளை மாத்தி மாத்தி பார்த்துக்குறோம்!'' - தேவயானி
தேவயானி நடிப்பில் உருவாகியிருக்கிற 'நிழற்குடை' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
2018-க்குப் பிறகு தேவயானி நடிக்கும் தமிழ் திரைப்படம் இது. இப்படத்தில் தேவையாணி ஈழ தமிழராக நடித்திருக்கிறார்.
படம் தொடர்பாகவும் தன்னுடைய பர்சனல் பக்கங்கள் தொடர்பாகவும் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் தேவயானி.

தேவயானி பேசுகையில், "ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு படம் பண்ணியிருக்கேன். சரியான கதாபாத்திரங்கள் அமையாததுதான் படம் கொடுக்காததற்கு காரணம்.
சரியான படம் வரணும்னு காத்திட்டு இருந்தேன். அப்படியான ஒரு திரைப்படம்தான் இந்த 'நிழற்குடை'.
இந்தக் காலகட்டத்துல முதியோர் இல்லங்கள் அதிகமாகிட்டு இருக்கு. குழந்தைகள் இப்போ அதிகமாக ஃபோன், லாப்டாப், வீடியோ கேம்ல அடிமையாகி இருக்காங்க. இந்த நிலைமை மாறணும்.
நம்ம குழந்தைகளுக்கு உறவுகள் பற்றி அதிகமாக சொல்லிக் கொடுக்கணும். எங்களுடைய குழந்தைகளை கவனிச்சுகிறதுக்கு உதவி இருந்தது.
நானும் ராஜகுமாரன் சாரும் இப்போ வரைக்கும் குழந்தைகளை மாத்தி மாத்தி பார்த்துக்குறோம்.
எங்களுடைய நேரத்தை 100 சதவீதம் எங்களுடைய குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். வேலை செய்யுற ஆள்களை நாங்க நம்பி இருந்தது கிடையாது.
டிரைவர் இருந்தாலும் நான் டிரைவ் பண்ணி என்னுடைய குழந்தைகளை ஸ்கூல்ல விடுவேன். இப்போ எங்க வீட்டுல டிரைவரும் கிடையாது.
சமையலுக்கும் ஆள்கள் கிடையாது. சமையலுக்கு ஆட்கள் இருந்த சமயத்திலையும் நான் சமைப்பேன். இப்போ முழுவதுமாக நாங்கதான் சமைக்கிறோம்.
கொரோனாவுக்குப் பிறகு நிலைமை மாறிடுச்சு. எங்க வேலைகளை நாங்கதான் செய்றோம். குழந்தைகளுக்கு அதுதான் பிடிக்கும்.
நாங்கதானே குழந்தைகளை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தோம்.

அவங்களை நாங்கதான் பார்த்துக்கணும். அவங்கதான் எங்களுடைய பெரிய சொத்து. இனிமேல் அதிகமாக படங்கள் நடிக்கிறேன்.
இந்த வருஷத்துல அடுத்தடுத்து படங்கள் வரும். சரியான கதாபாத்திரங்கள் அமைந்தால் நிச்சயமாக சேர்ந்து நடிப்பேன்.
சின்ன பட்ஜெட் படங்களும் இங்க அதிகமாக ஓடணும். முன்னாடியெல்லாம் மவுத் ஆஃப் டாக் மூலமாக படங்கள் 100, 200 நாள்கள் ஓடியிருக்கு. ஆனால், இப்போ நிலைமை அப்படி இல்ல.
இப்போ வன்முறை அதிகமாக இருக்கிற படங்கள் வருது. அதற்கு மத்தியில நல்ல மெசேஜ் இருக்கிற படங்களும் வரணும்.
நான் மற்ற மொழி படங்கள் நடிச்சு ஹிட் கொடுத்திருந்தாலும் தமிழ் படங்களுக்கு முதல்ல தேதி இருக்காணுதான் கவனிப்பேன்.
தமிழ் படங்களுக்குதான் முன்னனுரிமை." என உற்சாகமுடன் பேசினார்.