குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: கும்பம்
உங்களின் பூர்வ புண்ய புத்திர ஸ்தான ராசியான ஐந்தாம் இடத்தில் குரு சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். எதிர்பார்த்த புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். பிள்ளைகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களின் அறிவாற்றலால் அனைத்து விஷயங்களிலும் முத்திரை பதிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். இல்லத்தில் திருமணம், புத்திர பாக்கியம் ஆகிய சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். குடும்பத்தாருடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். உங்களின் பெயரும், புகழும் உயரும். உங்களின் செயலாற்றும் திறமையால் உங்களைச் சுற்றியுள்ளவர்களை கவர்வீர்கள்.
வம்பு, வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பங்கள் ஏற்பட்டு வருமானம் வரத் தொடங்கும். பல வழிகளிலும் வருமானத்தைக் காண்பீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் காரியங்கள் அனைத்தும் தடங்கலின்றி நிறைவேறும்.
குரு பகவானின் பார்வை ஒன்பதாம் இடமான பாக்யஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் சமுதாயத்தில் பெரியோர்களின் நட்பும், ஆசியும் உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உங்கள் காரியங்கள் அனைத்திலும் அதிக விழிப்புடன் நடந்துகொள்வீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். வெளிநாடு செல்ல விசா எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த ஆண்டு விசா கிடைத்து குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறுவார்கள்.
குரு பகவான் உங்களின் லாப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். இதனால் புதிய வாகனம், ஆடை அணிகலன்கள் சேரும். மூத்த சகோதர சகோதரர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அனாவசிய செலவுகள் ஏற்படாது. சேமிப்பு இரட்டிப்பாகும்.
குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது படிகிறது. இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கையில் முன்னேற தக்க தருணங்கள் வரும். அவற்றை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். தனித்து இயங்கிய நீங்கள் மற்றவர்களால் சூழப்பட்டு மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். சக ஊழியர்களும் நட்பு பாராட்டுவார்கள். பணவரவிற்கு சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தத் தடையும் இருக்காது. விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். உங்களின் வேலைத் திறன் பளிச்சிடும்.
வியாபாரிகளுக்கு
திட்டங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல இடங்களுக்கும் அனுப்பி உங்களின் பொருட்களை விற்பனை செய்ய முற்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கினாலும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முடிவு செய்யுங்கள்.
விவசாயிகளுக்கு
மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. சிலருக்கு பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள். போட்டிகளையும், வயல், வரப்பு சண்டைகளையும் சந்திக்க நேரிடும்.
அரசியல்வாதிகளுக்கு
தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிர்கட்சியினரால் கஷ்டங்கள் ஏற்படாது என்றாலும் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினருக்கு
எதிர்பாராத வகையில் வெற்றிகள் கிடைக்கும். உங்கள் வேலைகளைக் குறித்த நேரத்திற்குள் முடித்துவிடுவீர்கள். உங்கள் திறமைகள் மக்களைக் கவரும் விதத்தில் அமையும். மற்றபடி வெளிவட்டாரங்களில் கவனமாகப் பழகவும். சக கலைஞர்களிடம் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.
பெண்மணிகளுக்கு
கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.
மாணவமணிகள் அதிகம் உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.
அவிட்டம் - 3, 4
உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும்.
சதயம்
நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.
பூரட்டாதி 1, 2, 3
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும். பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும்.
பரிகாரம்
வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும்.