குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: தனுசு
உங்களின் சப்தம ஸ்தானமான ஏழாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் அருளால் உங்களின் வாழ்க்கை வசதிகள் உயரும். சிலர் வசதியான வீடுகளுக்கு மாறுவார்கள். திருமணம் தடைப்பட்டவர்களுக்குத் திருமணம் நடந்தேறும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். நண்பர்கள், கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பகை நீங்கும்.
நடக்காமல் தள்ளி வைத்திருந்த விஷயங்கள் சிறப்பாக நடந்தேறும். போட்டிகளைத் தைரியமாக எதிர்கொள்வீர்கள். புதிய வருமானம் தரும் தொழிலில் ஈடுபடுவீர்கள். புதிய வீடு கட்ட அஸ்திவாரம் போடுவீர்கள். வருமானம் குறைவாக இருந்த தொழில்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வம்பு, வழக்குகளில் உங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புகள் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பால் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உங்களுக்கு நன்மைகள் செய்யும் வகையில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் தடைகள் இல்லாமல் சுலபமாக நிறைவேறும்.
இந்தக் காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான திருப்புமுனைகள் உண்டாகி புதிய பாதையில் பயணிப்பீர்கள்.
குரு பகவானின் பார்வை உங்களின் லாபஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொகுசு வாகனங்களில் பயணிப்பீர்கள். பல வழிகளில் வருமானம் கிடைத்து உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
குரு பகவானின் பார்வை உங்களின் ராசியின் மீது படிவதால் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எவரையும் சாராமல் தனித்து காரியங்களைச் செய்து சாதனை புரிவீர்கள். யோகா, பிராணாயாமம் செய்து மன அமைதி பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். களவு போயிருந்த பொருட்கள் மீண்டும் உங்களின் கை வந்து சேரும். காரியங்களில் பிடிப்பு ஏற்படும்.
குரு பகவானின் பார்வை உங்களின் மூன்றாம் ராசியில் படிவதால் மெதுவாக நடந்துகொண்டிருந்த காரியங்கள் விரைவாக முடியும். தனித்து உங்கள் எண்ணப்படி செயல்படுவீர்கள். உங்கள் செயலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். மற்றபடி ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்த மேலதிகாரிகள் இடம் மாறிச் செல்வார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு ஊதிய உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் கடன் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு
கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறைவும் ஏற்படாது. கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். சந்தையில் போட்டிகளை சாதுரியமாகச் சமாளிப்பீர்கள்.
விவசாயிகளுக்கு
நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்கள் மானியத்துடன் கிடைக்கும். ஆனாலும் கால்நடைகளுக்குக் கூடுதலாக செலவு செய்ய நேரிடும். புழு பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாது.
அரசியல்வாதிகளுக்கு
அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.
கலைத்துறையினருக்கு
நன்மை தரும் திருப்பங்கள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். மற்றபடி சுறுசுறுப்புடன் காரியங்களில் ஈடுபடவும்.
பெண்மணிகளுக்குக்
கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிறையும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீண் யோசனைகள் வேண்டாம்.
மாணவமணிக்ளுக்கு
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்துப் பழகவும்.
மூலம்
சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலம் வாய்க்கும்.
பூராடம்
மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
உத்திராடம் - 1
தொழில்துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாகப் போவார்கள். வங்கி பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
பரிகாரம்
அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீ பைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்குப் போடவும்.