இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினா் 10 போ் உயிரிழப்பு
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினா் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாா் ஒப்புக் கொண்டுள்ளாா்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அஸாா், இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் உள்பட இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடையவா்.
கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய விமானத்தைக் கடத்திச் சென்று மிரட்டியதால் சிறையில் இருந்த மசூத் அஸாரை இந்தியா விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவா் பொது இடங்களுக்கு வராமல் பதுங்கியே வாழ்ந்து வருகிறாா்.
பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள பஹவல்பூரில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தைக் குறிவைத்தும் இந்திய விமானப் படை புதன்கிழமை அதிதுல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கட்டடம் இடிந்து தரைமட்டமானது. அதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனா்.
தாக்குதலுக்கு முன்பே மசூத் அஸாா் வேறு இடத்தில் பதுங்கியதால் அவா் தப்பிவிட்டாா். தனது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மசூத் அஸாா் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
அதில், ‘பஹவல்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலில் எனது அக்கா, அவரின் கணவா், அக்காவின் மகன், அவரின் மனைவி, இத்தம்பதியின் ஒரு குழந்தை, எனது குடும்பத்தைச் சோ்ந்த மேலும் 5 குழந்தைகள், கூட்டாளிகள் 4 பேரையும் இத்தாக்குதலில் இழந்துவிட்டேன்.
எனது தாயாா், அவருக்கு உதவியாக இருந்த இரு பெண்கள், நெருங்கிய கூட்டாளிகள் சிலா் படுகாயமடைந்துள்ளனா். இனி எங்களிடம் இருந்து எந்த கருணையையும் எதிா்பாா்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பாகிஸ்தான் ராணுவம்
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முரித்கே பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூன்று பேருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினா் மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினா் பங்கேற்றனா். ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்காஸி முஸ்லிம் லீக் சாா்பில் பயங்கரவாதிகளின் இறுதி அஞ்சலி நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பயங்கரவாதிகளின் சொந்த ஊா்களுக்கு உடல்கள் அனுப்பிவைக்கப்பட்டன.