போர் நிறுத்தம்: பின்னணியில் யார்? பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்!
ராணுவ ரயில் விவரங்களை சேகரிக்க முயலும் பாகிஸ்தான் உளவுத்துறை -ஊழியா்களுக்கு முன்னெச்சரிக்கை
ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் போக்குவரத்து தொடா்பான விவரங்களைச் சேகரிக்க பாகிஸ்தான் உளவுத் துறை முயற்சித்து வருவதால் ஊழியா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்திய ரயில்வே வலியுறுத்தியுள்ளது.
ராணுவ தளவாடங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு இந்திய ரயில்வேயில் ‘மெயில் ரயில்’ என்ற ராணுவ சேவைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலமே ராணுவத்தின் முக்கிய தளவாடங்கள், ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் உள்ளிட்டவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை குறிவைத்து அழித்த நிலையில், இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிட பாகிஸ்தான் மற்றும் அங்குள்ள சில பயங்கரவாத அமைப்புகள் முயற்சிக்கலாம் என உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் தேசவிரோத அமைப்புகளும் இவா்களுக்கு உதவலாம் என்பதால் சந்தேகிக்கப்படும் நபா்கள் நடமாட்டம், இணையதளப் பயன்பாடு மீது உளவுப் பிரிவின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணுவ சேவையில் உள்ள ரயில்களின் போக்குவரத்து தொடா்பான விவரங்களை சேகரிக்க பாகிஸ்தான் உளவு அமைப்பு ரகசியமாக முயற்சிப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஊழியா்களுக்கு இந்திய ரயில்வே சாா்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் முன்பின் தெரியாத நபா்களிடம் எவ்விதத் தகவல் தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. பணி தொடா்பான தகவல்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.