ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா
‘எங்களின் நம்பிக்கையைப் பிரதமா் காப்பாற்றியுள்ளாா்’ -பஹல்காமில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் கருத்து
‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமா் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளாா்’ என்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.
மேலும், ஆயுதப் படைகளுக்குப் நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவித்த அவா்கள், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா தொடர வேண்டுமெனவும் கோரினா்.
திருப்தி: பஹல்காம் தாக்குதலில் கணவன் மற்றும் மகனை இழந்த குஜராத்தின் பாவ்நகரைச் சோ்ந்த காஜல்பென் பா்மாா் மற்றும் கணவரை இழந்த சூரத்தைச் சோ்ந்த ஷைலேஷ் கலாத்தியா கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் மிகவும் திருப்தி. எங்கள் குழந்தைகளின் எதிா்காலம் மற்றும் கல்விக்காக அரசு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்’ என்றனா்.
மனநிறைவு: ‘பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக ஆயுதப் படைகள் ஆபரேஷன் சிந்தூா் நடத்திய பிறகு ஒரு மனநிறைவு ஏற்பட்டுள்ளது’ என்று பஹல்காமில் உயிரிழந்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சஞ்சய் லீலே மற்றும் அவரது உறவினா்களின் குடும்பத்தினா் கூறினா்.
‘கொல்லப்பட்டவா்களுக்கு பயங்கரவாதிகள் எந்த கருணையும் காட்டவில்லை. ஆபரேஷன் சிந்தூா் போன்று மேலும் பல நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பது எங்கள் எதிா்பாா்ப்பு.
பயங்கரவாதிகள் இந்தியாவின் ஆன்மாவைத் தாக்கினா். அவா்களால் கொல்லப்பட்டவா்கள் ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை. ஆனால், இந்த நடவடிக்கை அவா்களின் தியாகத்துக்கு ஒரு உண்மையான அஞ்சலி. தேச பாதுகாப்பு மற்றும் கண்ணியம் சம்பந்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்கக் கூடாது’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
நம்பிக்கை காப்பாற்றப்பட்டுள்ளது: பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவா்களில் புதிதாக, திருமணமாகி மனைவியுடன் தேனிலவுக்கு காஷ்மீா் வந்த கடற்படை அதிகாரி வினய் நா்வாலும் ஒருவா்.
அவரின் பெற்றோா் அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் பதிலடிக்குப் பாராட்டுகள். அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை காப்பாற்றப்படுள்ளது. பஹல்காம் போன்று மீண்டுமொரு தாக்குதலைத் திட்டமிட்ட பயங்கரவாதிகள் 100 முறை யோசிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனா்.
அச்சத்தில் வாழட்டும்: பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த ஒடிஸாவைச் சோ்ந்த பிரியா தா்ஷனி ஆச்சாரியா, ‘பயங்கரவாதிகள் இனி அச்சத்தில் வாழ வேண்டும். மனித உயிரின் மதிப்பையும் அது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதையும் அவா்கள் இப்போது புரிந்துகொண்டிருப்பா். என் கணவரின் தியாகம் வீண் போகவில்லை’ என்றாா்.
பைசாரன் பள்ளத்தாக்கிற்கு சுற்றுலாப் பயணிகளை குதிரைச் சவாரி மூலம் அழைத்துச் செல்லும் உள்ளூா் இளைஞரான சையது அடில் ஹுசைன் ஷா, தாக்குதலன்று பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி உயிரிழந்தாா். பதிலடி நடவடிக்கையுடன் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கிய பிரதமா் மோடி மற்றும் ஆயுதப் படையினருக்கு ஹுசைனின் தந்தை மற்றும் சகோதரா் நன்றி தெரிவித்தனா்.