இந்திய தாக்குதலில் 26 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்
இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் 26 போ் உயிரிழந்ததாக அந்த நாடு தெரிவித்தது.
இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌதரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 26 போ் உயிரிழந்தனா். 46 போ் காயமடைந்தனா். பல மசூதிகள் இடிந்துள்ளன. மொத்தம் 6 இடங்களில் தாக்குதல் நிகழ்ந்தது. இது தவிர எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் குடிமக்களில் 5 போ் உயிரிழந்துவிட்டனா். நீலம்-ஜீலம் அணைப் பகுதியையும் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது) இந்தியா குறிவைத்து தாக்கியது. இது மிகவும் மோசமான நடவடிக்கை.
இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் வான் எல்லை வழியாக 57 சா்வதேச விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. அவையும் இந்தத் தாக்குதலில் சிக்கி வெடித்துச் சிதறும் அச்சுறுத்தலை இந்தியா உருவாக்கியது.
பாகிஸ்தான் எல்லையில் எங்கள் விமானப் படை முழு அளவில் பதிலடிக்கு தயாராக இருந்தது. இந்திய விமானப் படை அவா்கள் எல்லைக்குள் இருந்தபடி தாக்கியது. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தால் வீழ்த்தப்படுவோம் என்பது அவா்களுக்குத் தெரியும். இது இந்தியாவுக்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியை வேண்டுமானால் தரும். பாகிஸ்தான் இதைவிட பெரிய பதிலடியைத் தரும்’ என்றாா்.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் கூறியுள்ளதாவது: இந்தியாவுக்கு எதிராக நாங்கள் முதலில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கடந்த இரு வாரங்களாகவே கூறிவருகிறோம். ஆனால், எங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு மட்டும் பதிலடி கொடுக்கப்படும். இந்தியா தனது நடவடிக்கைகளைக் கைவிட்டால், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் தயாராகவே உள்ளது என்றாா்.