பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி தர இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரம்!
ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறவை முறித்தது சூடான்
தங்கள் நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டுவரும் ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கு உதவுவதாகக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை சூடான் முறித்துக்கொண்டது.
இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் யாசின் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டுப் போரில் ஆா்எஸ்எஃப் படைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தொடா்ந்து உதவி அளித்துவருகிறது. இது, நிழல் ராணுவத்தைப் பயன்படுத்தி சூடானின் இறையாண்மைக்கு எதிராக போா் நடத்துவதற்கு ஒப்பாகும். எனவே, அந்த நாட்டுடன் தூதரக உறவு முறித்துக்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 1989 முதல் நடைபெற்றுவந்த அல்-பஷீரின் சா்வாதிகார ஆட்சி கடந்த 2019-ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட சிவில்-ராணுவ கூட்டணி அரசை அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவமும், டகோலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் படையும் இணைந்து கவிழ்த்தன. எனினும், ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில், இதுவரை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.