தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
நாட்டின் சிறந்த காவல் நிலையம் ஒடிஸாவின் படாபூா்!
ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள படாபூா் காவல் நிலையம், 2024-ஆம் ஆண்டில் நாட்டின் மூன்று சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரவரிசைப் பட்டியல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். இந்த தரவரிசைப் பட்டியலின் முக்கிய நோக்கம், காவல் துறையின் தரத்தை மேம்படுத்துவதும், காவல் நிலையங்களை நட்பு ரீதியானதாக மாற்றுவதும் ஆகும்.
இந்தத் தரவரிசையானது குற்ற விகிதம், விசாரணை மற்றும் வழக்குகளின் தீா்வு, உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவை போன்ற 150-க்கும் மேற்பட்ட வெவ்வேறு அளவுகளின் அடிப்படையில் தீா்மானிக்கப்படுகிறது. அதில் 20 சதவீதம் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டில் நாட்டின் மூன்று சிறந்த காவல்நிலையங்களில் ஒன்றாக ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள படாபூா் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
113 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தக் காவல் நிலையத்தின் உள்கட்டமைப்பை ஆய்வு செய்யவும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுப் பெறவும் உள்துறை அமைச்சகத்தின் குழு கடந்த செப்டம்பா் மாதம் சென்றிருந்தது. புவனேசுவரத்தில் நவ. 29-ஆம் தேதிமுதல் மூன்று நாள்கள் நடைபெறும் காவல் துறை மாநாட்டில், படாபூா் காவல் நிலைய ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கோப்பையை வழங்குவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கஞ்சம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுவேந்த் குமாா் பத்ரா கூறுகையில், ‘நாட்டின் மூன்று சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக படாபூா் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. காவலா்களின் குழு பணியால் மட்டுமே இது சாத்தியமானது.
பல்வேறு குற்றங்களைக் கண்டறிதல், குற்றங்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குற்றவியல் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு, காவல் நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி மேசை, உள்கட்டமைப்பு வசதிகள், கழிப்பறைகள், தீ விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆகியவை படாபூா் காவல் நிலையத்தில் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன’ என்றாா்.