`மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு'- மராத்திக்காக பகையை மறந்து கூட்டணி சேரும் தாக்க...
நாட்டில் 5-ல் ஒருவருக்கு சிறுநீரக நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
நாட்டில் சிறுநீரக பாதிப்பு அமைதியான முறையில் வேகமாக வளர்ந்து வருவதாகவும் தற்போது இந்தியாவில் 5ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டில் நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி சிறுநீரக நோய் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு அமைதியாக, படிப்படியாக வளர்ந்து முற்றும்போதுதான் கவனத்துக்கு வருகிறது. நாட்டின் தற்போதைய சுகாதார சவால்களில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது இந்த 'சிறுநீரக நோய்'.
நெப்ராலஜி என்ற இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள், இந்தியாவில் சிறுநீரக பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை உறுதி செய்கிறது.
2011 முதல் 2023 வரையிலான தரவுகளின் அடிப்படையில் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே நாள்பட்ட சிறுநீரக நோய் பரவல் 11.2% (2011-17)லிருந்து 16.38% (2018-23) ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகையில் 5-ல் ஒரு பங்கினர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாமதமாக நோயறிதல் மற்றும் நவீன சிகிச்சையை பெற முடியாததால் நோய் முற்றிய நிலையை அடைந்து அமைதியான தொற்றாகவும் மாற்றுகிறது.
"ஆரம்ப நிலைகளில் இந்த நோயின் அறிகுறிகள் அவ்வளவாகத் தெரியாது. இதனால் ஆரம்பத்தில் நோயை அடையாளம் காண்பது கடினம். பெரும்பாலான மக்கள் முற்றிய பின்னரே நோயைக் கண்டறிவார்கள். சோர்வு, வீக்கம், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும் நேரத்தில் சிறுநீரகத்தின் செயல்பாடு பெரும்பாலும் குறைந்துவிடும். இந்தக் கட்டத்தில் மீண்டு வருவது சற்று கடினம்தான். எனவே, வழக்கமான பரிசோதனை மூலமாகவே ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்" என்று தில்லி ஆகாஷ் ஹெல்த் கேர் சிறுநீரக நிபுணர் டாக்டர் உமேஷ் குப்தா கூறினார்.
இதையும் படிக்க | உங்கள் டீன்-ஏஜ் குழந்தைகள் தனிமையை விரும்புகிறார்களா? பதின்வயதினரின் பிரச்னைகள்!!
மேலும், மோசமான உணவு பழக்கவழக்கம், உடல் செயல்பாடு இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நவீன மாறுபட்ட வாழ்க்கைமுறையால் பாதிப்புகள் அதிகரித்துள்ளது என்றும் உயர் ரத்த அழுத்தம் அல்லது கால்களில் அவ்வப்போது வீக்கம் ஏற்பட்டால் அது சிறுநீரக பாதிப்புகளுக்கான அறிகுறிகளாக இருக்கும் என்றும் தெரிவித்தார். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகப்படியான உப்பு, சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
"கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை, சிறுநீரகங்களில் உள்ள சிறிய ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது, கழிவுகளை வடிகட்டும் திறனைப் பாதிக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளிகளில் 30% பேருக்கு இறுதியில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தத்தால்தான் சிறுநீரக பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது" என்று ஃபரிதாபாத்தில் உள்ள ஆசிய மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் ரீதேஷ் சர்மா கூறினார்.
பாதிப்பு ஏற்பட்டவுடன் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்ற நோயாளிகளுக்கு டயாலிசிஸ் தேவைப்படலாம். டயாலிசிஸ் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். அதேநேரத்தில் அது முறையான சிகிச்சை அல்ல என்றும் ஒரு தரப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நோய்க்கு ஆரம்பகால கண்டறிதலுடன் குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவை.
ஏனெனில் ஆரம்பத்திலேயே கண்டறிதல் நோயிலிருந்து விடுபடுவது மட்டுமின்றி நிதி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது, உடல்ரீதியான அபாயத்தையும் குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதேநேரத்தில் கிராமங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இதற்கான நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் எளிதாகக் கிடைக்கவில்லை, சிகிச்சைக்காக பலரும் நீண்ட தூரம் பயணிக்கிறார்கள், பலருக்கு நிதிச்சுமை போன்ற பல்வேறு சவால்களும் இருக்கின்றன.
இந்த ஆய்வின்படி கிராமப்புறங்களில் 15.34% பாதிப்பும் நகர்ப்புறங்களில் இதுவே 10.65% ஆகவும் உள்ளது.
சிறுநீரக பாதிப்பு முற்றியபின் கண்டறிவது ஆபத்து என்பதால் ஆரம்பத்திலேயே கண்டறிய, மக்கள் எளிதாக பரிசோதனைகளை அணுகும் வகையில் அரசுத் துறைகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.