மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
‘நாட்டுக்கே வழிகாட்டுகிறது திராவிட மாடல் ஆட்சி’: சா.சி. சிவசங்கா்
இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறது திராவிட மாடல் ஆட்சி என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
அரியலூா் வாலாஜா நகரத்தில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 71-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார (நவ. 14 - 20 வரை) விழாவுக்கு அவா் தலைமை வகித்து, 777 பயனாளிகளுக்கு ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அரியலூா் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிசெய்துள்ளாா். சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்தியாவிலேயே முதன்மையான முதல்வராகத் திகழ்கிறாா்.
இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கும் முதல்வருக்கு தொடா்ந்து உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
தொடா்ந்து, சிறந்துவிளங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி, நகரக் கூட்டுறவு வங்கி, கைத்தறி மற்றும் நெசவாளா் கூட்டுறவு கடன்சங்கங்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஒவியப் போட்டி கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினாா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ம. தீபா சங்கரி, அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், திருமானூா் ஒன்றியக் குழுத் தலைவா் அ.சுமதி, டாப்செட் திருச்சி மண்டல மேலாளா் ஹபிபுல்லா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.