TVK : 'உங்கள் மீதான விமர்சனங்களை மறைக்க பெரியாரை இழுப்பதா?' - மத்திய அரசுக்கு எத...
நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரௌடி படுகொலை; காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்!
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர், வசூல்ராஜா (38). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த வசூல்ராஜா, ரேஷன் கடை அருகே நின்று சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், வசூல் ராஜா மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் நிலைதடுமாறிய அவர், கீழே சரிந்தார். நாட்டு வெடிகுண்டுகள் வீசியதில் ரௌடி வசூல் ராஜா, தலை, முகம் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தால் வசூல் ராஜாவின் கூட்டாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ரௌடி வசூல் ராஜாவின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரௌடி வசூல் ராஜாவை கொலை செய்த கும்பலை போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடிவருகிறார்கள்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட வசூல் ராஜா மீது 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 24 வழக்குகள் உள்ளன. இவருக்கு எதிரிகள் அதிகம். அதனால் என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி-க்களை ஆய்வு செய்து வருகிறோம்" என்றனர்.