நான் தெலுங்கில் இருந்து வந்தவன்னா யாராவது நம்புவாங்களா? - விஜய் ஆதிராஜ்| இப்ப என்ன பண்றாங்க? பகுதி 4
ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட வங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப்ப என்ன பண்றாங்க?’ என இவர்களைத் தேடிப் பிடித்தோம். விகடன் டாட்.காமில் (vikatan.com) இனி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை நீங்கள் இவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஞாயிற்றுக் கிழமை மாலை ஒரு படம், வெள்ளிக்கிழமை இரவு ஒலியும் ஒளியும் என தூர்தர்ஷன் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நிலை மாறி தனியார் சாட்டிலைட் சேனல்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய நாட்களில் சினிமா ஹீரோ லுக்கில் சின்னத்திரையில் ரவுண்ட் வந்தவர் விஜய் ஆதிராஜ்.
ஆங்கரிங், சீரியல் என இரண்டு ஏரியாவிலும் கலக்கினார். இத்தனைக்கும் இவரது தாய் மொழி தெலுங்கு.
'சின்னத்திரையில் தமிழில் வர்றதுக்கு முன்னாடி ஹிந்தி, கன்னடத்தில் பண்ணினேன். தமிழில் முதன் முதலில் தூர்தர்ஷன்ல அறிமுகமானேன். சில வாரங்கள் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் அப்பெல்லாம் ட்ரெண்டிங். என்னுடைய முதல் ரெண்டு மூணு சீரியல்கள் இந்த ரகம்தான்.

அடுத்து என்னுடைய அப்பா எனக்காகவே சொந்தமா சீரியல் தயாரிப்பில் இறங்கினார். அந்த சீரியல் எனக்கு ரொம்ப நல்ல பெயரைத் தந்திச்சு.
அடுத்து சன் டிவி. 'நீங்கள் கேட்ட பாடல்' நிகழ்ச்சி. அந்த மாதிரியான ஷோக்கள் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவுக்கு அப்ப புதுசுங்கிறதால நல்ல வரவேற்பு. தொடர்ந்து ஆங்கரிங் ல இருந்து அப்படியே சீரியல் பக்கம் நகர்ந்து ஏகப்பட்ட சீரியல்கள்ல நடிச்சாச்சு. இன்னைக்கும் நான் தெலுங்கில் இருந்து வந்தவன்னு சொன்னா இங்க யாராச்சும் நம்புவாங்களா? அந்தளவு வாரி அணைச்சு எனக்கு ஆதரவு தந்து வாழ வச்சது தமிழ் தொலைக்காட்சி ஏரியா' என தன்னுடைய முப்பதாண்டு க்கும் மேற்பட்ட சின்னத்திரை அனுபவத்தை ஏற்கனவே விகடனிடம் முன்பு ஒருமுறை பேசியிருந்தார் இவர்.
ஏ.வி.எம்., ராடான், ஹோம் மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் பல சீரியல்களில் நடித்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் மனிதர் அவ்வளவு பிஸி. 90 களில் தொடங்கி 2013ம் ஆண்டு வரையில் ஏதாவதொரு டிவியில் இவரது முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்கிற ஒரு நிலை இருந்தது என்றால் மிகையில்லை. ஒரு டிவியில் முகம் காட்டி பிரபலமாகிவிட்டால், போட்டி சேனல்கள் வலை விரிப்பார்களே, அதுவும் நடந்தது.
சன் டிவி மூலம் பிரபலமானவரை ஜெயா டிவி அழைத்ததும் நடந்தது. அங்கும் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
சின்னத்திரையில் போதும் என்கிற அளவுக்கு கிடைக்கிற புகழ் அடுத்த கட்டமாக நகர்த்துவது சினிமா. விஜய் ஆதிராஜையும் அதுவிடவில்லை.
'பொண்ணு வீட்டுக்காரன்', 'ரோஜாக்கூட்டம்', 'கலகத் தலைவன்' உட்பட சில படங்களில் நடித்தார். ஆனால் அதன் பிறகு சினிமாவில் பார்க்க முடியவில்லை.

இதுகுறித்து கேட்டபோது,
'சின்னத்திரைக்கு பிரேக் விட்டது சொந்தமா நானே எடுத்த முடிவு. ஒரே மாதிரியான ஒர்க்கை தொடர்ந்து செஞ்ட்டிருக்கிரப்ப ஒருவித சலிப்பு உண்டாகுமில்லையா, அப்படித் தோணுச்சு. அதனால ஒரு மாற்றத்துக்குத் தயாராகலாமேன்னு முடிவு செஞ்சேன். ஆனா சினிமா நான் எதிர்பார்த்த ரிசல்ட் தரலை. சினிமாவுல நீடிக்க அதிர்ஷ்டம் இருக்கணும்னு பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அது நிஜம்தானோங்கிற நம்பிக்கை எனக்குமே வந்துடுச்சு. ஏன்னா, சின்னத்திரை நடிகர்களை நம்ம சினிமா என்கரேஜ் செய்யறதில்லைங்கிறது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. இப்பவும் டிவி நட்சத்திரங்களைக் கேட்டுப்பாருங்க பலர்கிட்ட இருந்து இந்தப் பதில்தான் வரும். டிவியில் ஆயிரம் எபிசோடுகள் வரை டைரக்ட் செஞ்ச ராஜமௌலி, தமிழில் சிவகார்த்திகேயன், சந்தானம்னு சிலர் விதிவிலக்கான உதாரணங்களா இருந்தாலும் இன்னைக்கும் ரியாலிட்டி என்னவோ கொஞ்சம் கசப்பானதாகத்தான் இருக்கு. இந்த கிரவுண்ட் ரியாலிட்டி புரியறப்ப இன்டஸ்ட்ரி ரொம்பவே மாறி இருந்துச்சு. திரும்ப பெரியதொரு இடைவெளிக்குப் பிறகு ஒரு தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்தேன். டிவியில் 'செல்லமே' என்கிற இந்தத் தொடர் தான் நான் கடைசியா நடிச்சது' எனச் சொல்லியிருப்பார்.
ஆனாலும் மீடியாவை முழுவதுமாக விட்டு வெளிவர முடியவில்லை இவரால். செகண்ட் இன்னிங்ஸாக டைரக்ஷனைத் தேர்ந்தெடுத்துக் களமிறங்கினார். 'புத்தகம்' என்ற இவரது முதல் படம் வெளிவந்தது. ஆனால் படம் இவருக்கு நல்ல தொடக்கத்தைத் தரவில்லை.
இதற்குப் பிறகு டிவி, சினிமா, ஷார்ட் ஃபிலிம் என எல்லாவற்றிலிருந்தும் விலகி சில ஆண்டுகள் வேறு சில வேலைகளிலும் ஈடுபட்டார்.
மனைவி நடத்திய ஈவென்ட் கம்பெனியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தார். டிஜிடல் ஆப் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். கொஞ்ச காலம் சேனல் ஒன்றில் முக்கியப் பொறுப்பு வகித்தார்.

சரி, இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்? தொடர்பு கொண்டு பேசினோம்.
'எங்கிருந்தோ வந்த என்னை தமிழ் மக்கள்கிட்ட கொண்டு சேர்த்த டிவி சினிமாவை என்னாலவிட முடியலங்கிறது நிஜம்தான். நான்விட நினைச்சாலும் அது என்னை விடாது. கொஞ்ச காலம் பிசினஸ் பக்கம் கவனம் செலுத்தினேன். அதுவும் நல்லபடியாதான் போயிட்டிருந்தது. ஆனா கொரோனோ தொற்று வந்தது. உலகமே அதுல ஷேக் ஆனப்ப நான் மட்டும் எப்படித் தப்பிக்க முடியும்? அது எல்லாத்தையும் மாத்திடுச்சு. அதனால மறுபடியும் அதே டைரக்ஷனுக்கு வந்துட்டேன்.

இப்ப 'நொடிக்கு நொடி'ங்கிற ஒரு படத்தை இயக்கிட்டிருக்கேன். 'குக்கு வித் கோமாளி' அஷ்வின், சக்தி வாசு உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்துல இருக்காங்க. முக்கால்வாசி வேலைகள் முடிவடைஞ்சிடுச்சு. ஓரிரு மாசத்துல பட ஒர்க் முடிஞ்சதும் உங்க எல்லாரையும் சந்திக்கலாம்னு இருக்கேன். டைரக்ஷன்ல இது என்னுடைய மூணாவது படம்.
'வெற்றி தோல்விங்கிறது சகஜம். ஆனா நிகழ்வதை கூலா எடுத்துகிட்டு தொடர்ந்து தொய்வில்லாம இயங்கிட்டே இருக்கணும்'கிறதுதான் என்னுடைய பாலிசி. இது எனக்கு என் அப்பா கத்துக் கொடுத்தது. அதனால நம்பிக்கையோட அடுத்த அடியை எடுத்து வைக்கப்போறேன்' என்கிறார் நம்பிக்கையுடன்.