எதிர்நீச்சல்: "உன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்துறேன்னு திருச்செல்வம் சார் சொன்னார்!" -ஷெரின்
பலருக்கும் ஃபேவரைட்டான 'எதிர்நீச்சல்' தொடரின் இரண்டாவது சீசன் சன் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது. திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த இரண்டாவது சீசனிலும் பலருக்கும் பிடித்தமான அத்தனை கதாபாத்திரங்களும் தொடர்ந்திருக்கிறார்கள்.

இந்தத் தொடரில் நடித்து வரும் ரித்திவிக் மற்றும் ஷெரினுக்கு இடையான காட்சிகள்தான் சில நாட்களுக்கு முன்பு மிக எதிர்பார்ப்போடு நகர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், ரித்விக்கையும், ஷெரினையும் சந்தித்துப் பேசினோம்.
இயக்குநர் திருச்செல்வம் குறித்துப் பேசிய ஷெரின், " திருச்செல்வம் சார் ஒரு டீச்சர் மாதிரி. அவர் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததும் கொஞ்சம் பிரஷராகி பரபரப்பாகிடுவோம். ஆனால், திருச்செல்வம் சார் நான் அந்தக் கதாபாத்திரத்துக்கு தயாராகுறதுக்கான நேரத்தைக் கொடுப்பாரு. அவர் இதற்கு முன்பு நான் செய்த சீரியல்களையும் பார்த்திருக்கிறார்.
என்னைப் அவர் பார்த்ததும் 'மெளன ராகம்' சீரியல்ல நடிச்ச பொன்னு தானே நீ'னு அடையாளப்படுத்திப் பேசினார். `இதுவரைக்கும் நீ சின்ன பெண் கதாபாத்திரங்களில் நடிச்சிருப்ப. நான் உன்னை ஹிரோயினா நடிக்க வைக்கிறேன்னு' சொன்னார். அவர் சொன்ன வார்த்தைகள்ல நம்பிக்கை வச்சிருக்கேன். நல்லதே நடக்கும்னு நம்புறேன்.

'பாக்கியலக்ஷ்மி' , 'எதிர்நீச்சல்' சீரியல்கள்ல என்னுடைய கதாபாத்திரத்தைப் பார்த்துட்டு மக்கள் அவங்க வீட்டுப் பெண்ணாக என்னை கனெக்ட் பண்ணிக்கிறாங்க. சிலர்கூட 'நீ பார்க்கிறதுக்கு அப்படியே என் பொண்ணு மாதிரி இருக்க. நீயும் எங்க குடும்பத்துல ஒரு பொண்ணுதான்'னு சொல்வாங்க.
இதெல்லாம் மிகப்பெரிய வார்த்தை. என்னுடைய பெயர் ஷெரின்கிறதையே மறந்து மயு (பாக்கியலக்ஷ்மி கதாபாத்திரம்) பாப்பாதானே நீனு சொல்லி வெளில அடையாளப்படுத்துறாங்க." எனக் கூறினார்.
சமீபத்தில் 'எதிர்நீச்சல்' தொடரை விரும்பி தொடர்ந்துப் பார்க்கும் பாட்டி ஒருவர் அதன் ஷுட்டிங் தளத்துக்குச் சென்று அனைவரிடமும் பேசியிருந்தார். அனைத்து தரப்பு மக்களின் அன்பும் 'எதிர்நீச்சல்' தொடருக்குக் கிடைத்ததைப் பற்றி ரித்திக் பேசுகையில், " 'எதிர்நீச்சல்' தொடர் தொடங்கின முதல் நாள்ல இருந்து இப்போ வரைக்கும் அனைத்து எபிசோடுகளையும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தப் பாட்டி பார்த்து எங்ககிட்ட பேசினாங்க. அது ரொம்பவே எமோஷனலான மொமண்ட்.

என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருந்தது, நான் ஆரம்பத்துல எப்படி இருந்தேன்'னு கவனிச்சு நிறைய விஷயங்கள் சொன்னாங்க." என ரித்திக் பேசி முடித்ததும் ஷெரின், " நான் அந்த தருணத்தை மறக்கவே மாட்டேன். ரொம்பவே நெகிழ்ச்சியான தருணம் அது.
அந்தப் பாட்டி அத்தனை விஷயங்களையும் கவனிச்சு எங்ககிட்ட அது தொடர்பாக பேசினாங்க. அவங்களுக்காக நாங்க காட்சியை நிறுத்திட்டு அவங்களோட பேசினோம். அந்தப் பாட்டியும் அன்னைக்கு ரொம்ப ஹாப்பியாக இருந்தாங்க." என நெகிழ்ச்சியாகப் பேசினார்.