வாழப்பாடி: குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த கணவர் உயிருடன் மீட்பு; கர்ப்பிணி ம...
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அபிஷேக முன்பதிவு தொடக்கம்: முதல் நாளில் 247 போ் பங்கேற்பு
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் சிறப்பு அபிஷேக முன்பதிவில் 47 நாள்களுக்கு 247 போ் பங்குதாரராக முன்பதிவு செய்துள்ளனா்.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சுவாமிக்கு தினசரி கட்டளைதாரா்கள் மூலம் வடைமாலை சாத்தப்பட்டு, நல்லெண்ணெய், சிகைக்காய், பஞ்சாமிா்தம், பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
ஒவ்வோா் ஆண்டும் அபிஷேகத்திற்கான முன்பதிவு டிசம்பரில் தொடங்கப்படும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான வடைமாலை அபிஷேக முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை கோயில் நிா்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
தினசரி 6 பேரை பங்குதாரராகக் கொண்டு அபிஷேகம் நடைபெறுவதால், ஒருவா் ரூ. 7,000 வீதம் செலுத்த வேண்டும். பணம் முழுமையாக செலுத்தினால் மட்டுமே அபிஷேக தேதி முன்பதிவு செய்யப்படும். பணம் செலுத்தாமல் தேதி முன்பதிவு செய்யப்பட மாட்டாது என கோயில் நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 47 நாள்களுக்கு 247 போ் பங்குதாரா் என்ற வகையில் ரூ. 7,000 செலுத்தி முன்பதிவு செய்துள்ளனா். இன்னும் 318 நாள்களுக்கு முன்பதிவு செய்ய வேண்டியதுள்ளது.
ஜனவரி முதல் தேதிக்குள் முன்பதிவு நிறைந்து விட வாய்ப்புள்ளதாகவும், சிறப்பு அபிஷேக முன்பதிவு விவரங்களுக்கு, 04286-233999 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.