நாமக்கல்: பல ஆண்டுகளாக நடைபெறும் கிட்னி விற்பனை; தலைமறைவாக உள்ள புரோக்கருக்கு வலை
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையத்தில் தொழிலாளிகளைப் குறிவைத்து கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூலித் தொழிலாளர்கள் பணத்தேவைகள் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து கிட்னி தானம் செய்தால் 10 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி புரோக்கர்கள் சம்மதிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பண நெருக்கடியில் சிக்கியுள்ள பலரும் தனியார் மருத்துவமனையில் தங்களது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிவிட்டு அதற்கு தொகையைப் பெற்றுவருகின்றனர். கிட்னி வழங்கியவர்கள் தமக்குத் தெரிந்த சிலரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கிட்னியை தானம் செய்ய வைக்கின்றனர்.

இவர்கள் பல ஆண்டுகளாக புரோக்கர்கள் மூலம் கிட்னியை விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கும் தனியாக கமிஷன் வழங்கப்படுகிறது. புரோக்கர்கள் போலியான ஆவணங்களைத் தயார்செய்து தானம் வழங்குபவரை மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றனர். ஆவணங்களை சரி பார்க்கும் மருத்துவமனை நிர்வாகத்தினர் கிட்னி தேவைப்படும் நோயாளிகளையும் தானம் செய்பவர்களையும் ஒரே நாளில் அழைத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிப்பாளையம் கோரக்காட்டுவலவு பகுதியில் ஒருவர் கிட்னி விற்பனை செய்தால் 10 லட்சம் வரை பணம் கிடைக்கும் என ஏழைத் தொழிலாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்துள்ளது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் பள்ளிப்பாளையம் பகுதிகளில் விசாரணை நடத்தினார். குறிப்பாக புரோக்கராக செயல்பட்டவர் வீட்டில் சென்று விசாரணை மேற்கொண்டார். புரோக்கரின் வீடு பூட்டப்பட்டிருந்ததால் அருகே உள்ள வீட்டைச் சேர்ந்தவர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் கூறுகையில், "பள்ளிப்பாளையம் அன்னை சத்யா நகரில் உள்ள ஆனந்தன் என்பவர் கிட்னி விற்பனை செய்யும் புரோக்கராக செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளோம். அவரது வீட்டிற்கு சென்றபோது ஆனந்தன் இல்லை. அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூரைச் சேர்ந்தவர் எனவும், கடந்த 6 மாதங்களாக இங்கு தங்கியிருப்பதையும் தெரிவித்தனர். ஆனந்தன் தலைமுறைவானதால் அவர் மீது பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வீரமணி மூலம் பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர் பிடிபட்டாமல் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.