ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?’ - பரபர ...
நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்
சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் 10.79 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
சேலம், அஸ்தம்பட்டி, சீரங்கபாளையம் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தொடங்கி வைத்தாா். பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
தமிழா் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக்கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் வழங்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் 1,264 முழு நேரம் மற்றும் 473 பகுதி நேரம் என மொத்தம் 1,737 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 10,77,575 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், 983 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 10,78,558 குடும்பங்களுக்கு ரூ. 12.18 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்கள் எவ்வித சிரமமின்றி நியாயவிலைக் கடைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மீராபாய், அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவா் உமாராணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் (பொ) ராஜ்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
ஆத்தூரில்...
ஆத்தூா் நகர கூட்டுறவு பண்டக சாலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் தொடங்கி வைத்தாா். நரசிங்கபுரத்தில் நகர திமுக செயலாளா் என்.பி.வேல்முருகன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தாா்.
ஆத்தூா் நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம், 14, 15, 16, 17-ஆவது வாா்டு பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தாா். இதேபோல, ஆத்தூா் ஒன்றியத்தின் சாா்பில் ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன் தலைமையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆட்டையாம்பட்டியில்...
இடங்கணசாலை கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில், நகரச் செயலாளா் செல்வம், நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, நகா்மன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.