நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
நியூயார்க்: 5 நாள்களுக்கு மூடப்படும் கோழிப் பண்ணைகள்!
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரத்தின் தி குயின்ஸ், தி பிரோன்ஸ் மற்றும் ப்ரூக்ளின் போரொஸ் ஆகியப் பகுதிகளிலுள்ள சந்தைகளில் கடந்த ஜன.31 முதல் மொத்தம் 7 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால், அம்மாகாணத்திலுள்ள நியூயார்க் நகரத்திலும் மற்றும் வெஸ்ட்செஸ்டர், சப்போள்க், நஸ்ஸாவு ஆகிய மாவட்டங்களிலும் உள்ள கோழிப் பண்ணைகள் அனைத்தும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்துவதற்காக அடுத்த 5 நாள்களுக்கு மூடப்படுவதாக நியூயார்க் மாகாண ஆளுநர் கேதி ஹோச்சூல் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அங்குள்ள சந்தைகளிலுள்ள அனைத்து பொருள்களையும் விற்று, சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் நடைமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க:நியூயார்க்: இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறை!
தற்போது வரை நியூயார்க்கில் மனிதர்கள் யாருக்கும் இந்த நோயின் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளர்ப்பு மற்றும் வனப் பறவைகளுடன் அதிகளவில் தொடர்பிலுள்ள நபர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் போன்றவற்றை அணிந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் 67 பேர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அதில் ஒருவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவியன் இன்புளுவன்ஸா என்றழைக்கப்படும் இந்த நோயானது வைரஸ் தாக்குதல்களினால் ஏற்படுவதாகும்.
இதனால், பாதிக்கப்படும் பறவைகள் மற்றும் விலங்குகள் கடுமையான நோயினால் அவதிப்படுவதுடன் உயிரிழக்கக் கூடிய அபாயம் உள்ளதாகவும் மனித கண்கள், மூக்கு, வாய் வழியாகவோ அல்லது சுவாசக் காற்றின் மூலமாகவும் இந்த கிருமி நுழைவதின் மூலம் இந்த நோயின் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.