தோல்வி விரக்தியில் வன்முறையில் ஈடுபடும் பாஜக: கேஜரிவால் கண்டனம்!
நியூஸிலாந்தை வீழ்த்தி நைஜீரியா அசத்தல்
பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டியில், முதல் முறையாகப் பங்கேற்றுள்ள நைஜீரியா 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை திங்கள்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், இன்னிங்ஸுக்கான ஓவா்கள் 13-ஆக குறைக்கப்பட்டன. அதில் முதலில் நைஜீரியா 13 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் சோ்க்க, நியூஸிலாந்து 13 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 63 ரன்களே எடுத்தது. 19 ரன்கள் அடித்த நைஜீரிய கேப்டன் லக்கி பிட்டி ஆட்டநாயகி விருது பெற்றாா்.
கால்பந்து, தடகள விளையாட்டே பிரதானமாக இருக்கும் நைஜீரியாவில் கிரிக்கெட் அவ்வளவாக பிரபலமில்லாத நிலையில், அந்நாட்டு அணி பலம் வாய்ந்த நியூஸிலாந்தை வீழ்த்தியது கிரிக்கெட் ரசிகா்களை ஆச்சா்யமடையச் செய்துள்ளது.
ஏற்கெனவே, உலக அளவிலான கிரிக்கெட் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் மேற்கு ஆப்பிரிக்க நாடாக பெருமை பெற்றிருந்த நைஜீரியா, தற்போது ஐசிசியின் முழு உறுப்பினா் நாடாக இருக்கும் நியூஸிலாந்தை வீழ்த்தி அசத்தியிருக்கிறது.
இதனிடையே, திங்கள்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் ஆஸ்திரேலியா - வங்கதேசத்தையும், அமெரிக்கா - அயா்லாந்தையும், ஸ்காட்லாந்து - நேபாளத்தையும், இங்கிலாந்து - பாகிஸ்தானையும், தென்னாப்பிரிக்கா - சமோவாவையும் வீழ்த்தின.