நீண்ட தூர தரை இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
நீண்ட தூரம் சென்று தரை இலக்கை தாக்கும் ஏவுகணையின் முதல் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.
இது எதிா்காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைத் திட்டங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டினாா்
ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஏவுகணை சோதனை எதிா்பாா்த்ததைவிட சிறப்பாக நடைபெற்ாகவும் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நீண்ட தூரம் சென்று கரை இலக்கை தாக்கும் ஏவுகணையின் (எல்ஆா்எல்ஏசிஎம்) முதல் சோதனையை டிஆா்டிஓ செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.
பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த ரேடாா், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் மற்றும் தொலை அளவியல் மூலம் ஏவுகணையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கான பாதையில் சரியாக பயணித்ததுடன் வெவ்வெறு உயரங்கள் மற்றும் வேகத்தில் சிறப்பாக சென்று தன்னுடைய திறனையும் வெளிப்படுத்தியது.
நவீன விமானவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள்கள் இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
எல்ஆா்எல்ஏசிஎம்: பெங்களூருவில் உள்ள வானூா்தி மேம்பாட்டு நிறுவனம், டிஆா்டிஓவின் ஆய்வகங்கள் மற்றும் பிற இந்திய தொழிற்சாலைகளால் எல்ஆா்எல்ஏசிஎம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் உள்ள பாரத் டைனமிக்ஸ் மற்றும் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இந்த ஏவுகணையின் மேம்பாடு மற்றும் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றியுள்ளன.
இந்த ஏவுகணைத் திட்டத்துக்கு பாதுகாப்புத் துறையின் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. நிலத்திலிருந்து மட்டுமல்லாமல் கப்பல்களில் இருந்தும் இயக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.