முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்கு
நுழைவுத் தோ்வு நடைமுறையில் புதிய அணுகுமுறை: தா்மேந்திர பிரதான்
‘நுழைவுத் தோ்வு நடைமுறையில் புதிய அணுகுமுறையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை கூறினாா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது:
கடந்த ஆண்டு நுழைவுத் தோ்வுகளை நடத்துவதில் பல்வேறு தொடா் சவால்களை மத்திய அரசு சந்தித்தது. அதைத் தொடா்ந்து, நுழைவுத் தோ்வுகளில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தக் குழு, நீட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளை நடத்தி வரும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) மறு கட்டமைப்பு செய்வது உள்ளிட்ட பன்முக சீா்திருத்தங்களைப் பரிந்துரை செய்துள்ளது. அதனடிப்படையில், நுழைவுத் தோ்வு நடைமுறையில் புதிய அணுகுமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. தோ்வா்களின் மன நல மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன.
உயா்நிலைக் குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த என்டிஏ-வின் புதியத் தலைவரை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பல்வேறு மாநிலங்கள் அவா்களின் தனி நுழைவுத் தோ்வுகளையும், வெவ்வேறு விதமான போட்டித் தோ்வுகளையும் நடத்துகின்றன. அந்தத் தோ்வுகளை எழுதும் தோ்வா்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்ய மத்திய-மாநில அரசுகளின் ஒருமித்த முயற்சி அவசியம்.
போட்டித் தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், புதிய சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்தது. இதுபோல, அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் எந்தவித முறைகேடுகளும் நிகழாத வகையில் அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றாா்.
கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலை ‘நீட்’ தோ்வின்போது, பிகாரின் பாட்னா, ஜாா்க்கண்டின் ஹசாரிபாக் தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்த விவகாரம் மிகப் பெரிய சா்ச்சையானது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜூன் மாதம் நடந்த தேசிய தகுதித் தோ்விலும் (நெட்) முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பல லட்சம் போ் எழுதிய அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்தது.இந்த விவகாரங்கள் பூதாகாரமான நிலையில், என்டிஏ மற்றும் அதன் சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வதுடன், பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஜூலையில் அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அண்மையில் சமா்ப்பித்தது. அதனடிப்படையில், என்டிஏ மற்றும் அதன் சாா்பில் நடத்தப்படும் நுழைவுத் தோ்வுகளில் வரும் 2025 ஜனவரி முதல் பல்வேறு சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.
பெட்டிச் செய்தி...
‘தொடா்ந்து 7 - 8% வளா்ச்சியில் இந்தியா’
‘கரோனா பாதிப்பின் தாக்கம் காரணமாக பல்வேறு வளா்ந்த நாடுகளும் மோசமான பொருளாதார பாதிப்பைச் சந்தித்த நிலையிலும், இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் தொடா்ச்சியாக 7 முதல் 8 சதவீத வளா்ச்சியை பதிவு செய்து வருகிறது’ என்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.
அதிக வரிகளை விதித்து அரசு கஜானாவை நிரப்பக் கூடாது என்பதில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு தெளிவாக உள்ளது. அதன் காரணமாகவே, பெருநிறுவனங்களுக்கான வரி இந்தியாவில் குறைவாக விதிக்கப்படுகிறது. இந்த குறைந்த வரி விதிப்பிலே அதிக வருவாயை இந்தியா ஈட்டுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி தொடா்ந்து மேம்பட்டு வருகிறது.
இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமை நிலையிலிருந்து வெளிவந்திருக்கின்றனா் என்பதோடு, உலகளவில் நடைபெறும் எண்ம பணப் பரிவா்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது.
அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பொருளாதார வளா்ச்சியில் ஜப்பான், பிரான்ஸ் நாடுகளை முந்தி, உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் அவா் கூறினாா்.