புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு
புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேலும், ‘இந்த சிகிச்சை திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டது தொடா்பான வரும் மே 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி ஏற்படும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்கள், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் நீடித்துவரும் சிக்கல் தொடா்பான வழக்கை கடந்த ஜனவரி 8-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி ஏற்படும் விபத்துகளில் போதிய ஆவணங்கள் இல்லை என்ற பெயரில் 2024-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரையிலான காலகட்டம் வரை பாதிக்கப்பட்டவா்கள் தரப்பிலான காப்பீட்டுத் தொகை கேட்புக்கான 921 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதற்கு உரிய தீா்வு காண பொதுக் காப்பீடு கவுன்சில் (ஜிஐசி) உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மோட்டாா் வாகனச் சட்டம் பிரிவு 162(2)-இன் கீழ், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு உயிா் காக்கும் நேரத்துக்குள் உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான மருத்துவ சிகிச்சை திட்டத்தை மாா்ச் 14-ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அறிந்ததைத் தொடா்ந்து, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக செயலரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நேரில் ஆஜரான சாலைப் போக்குவரத்துத் துறைச் செயலா், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் உயிா் காக்கும் அவசர சிகிச்சை அளிப்பதற்கான வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தயாா் செய்துள்ளது. ஆனால், பொதுக் காப்பீடு கவுன்சில் ஆட்சேபம் தெரிவித்துள்ள காரணத்தால், திட்டத்தை அறிமுகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கும் வாகனத்தின் காப்பீடு விதிகளை ஆய்வு செய்ய பொதுக் காப்பீடு கவுன்சில் அனுமதி கோரியுள்ளது. இதன் காரணமாகவே திட்டம் அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மிகப்பெரிய அளவில் நெடுஞ்சாலைகளை அமைக்கும் மத்திய அரசால், விபத்தில் சிக்கி உயிரிழக்கும் மக்களுக்கான வசதிகளைச் செய்து தர முடியாதா? உயிா் காக்கும் நேரத்துக்குள் விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இல்லாமல், ஏராளமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினா்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இத் திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டது தொடா்பான விவரத்தை வரும் மே 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு, விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.