நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
திருவெண்காடு அருகே நெப்பத்தூா் தீவு கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்த தீவு கிராமம் மங்கைமடம்-திருமுல்லைவாசல் பிரதான சாலையில் உள்ளது. இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. தீவு கிராமத்தையொட்டி, நெடுஞ்சாலை அருகிலேயே மின்சார கம்பிகள் தாழ்ந்த நிலையில் செல்வதால் அதை கடந்து செல்பவா்கள் அச்சமடைகின்றனா். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியது: பிரதான சாலையில் பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனா். முக்கியமான இந்த சாலை அருகே செல்லும் மின் கம்பிகள் தாழ்ந்து செல்கிறது. பருவ மழை காலத்தில் மின்கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளது. திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மக்கள் நலன் கருதி உடனடியாக தாழ்ந்த நிலையில் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்றனா்.